மறக்க முடியுமா... கல்யாண பரிசு

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா... கல்யாண பரிசு

படம்: கல்யாண பரிசு
வெளியிடப்பட்ட ஆண்டு: 1959
நடிகர்கள்: ஜெமினி கணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி
இயக்கம்: ஸ்ரீதர்
தயாரிப்பு: வீனஸ் பிக்சர்ஸ்

'கல்யாண பரிசு படத்தை, குறைந்தது இருமுறையாவது பார்த்தவர்கள் தான், தமிழகத்தில் இருப்பர்' என்பது, அன்றைய காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.இதன் வழியே, அப்படம் பெற்ற வெற்றியை உணரலாம்.

ஸ்ரீதர், இயக்குனராக அறிமுகமான படம். புதுமை இயக்குனராக, அன்றைய இளைஞர்களால் கொண்டாடப்பட்டார். ஜெமினிகணேசனும், சரோஜா தேவியும் காதலிப்பார்கள். தன் அக்கா, விஜயகுமாரிக்காக, சரோஜாதேவி தன் காதலை விட்டுக்கொடுப்பார். திருமணத்திற்கு பின், அக்கா
சந்தேகப்படுவதால், சரோஜாதேவி வீட்டில் இருந்து வெளியேறுவார். தங்கையின் தியாகத்தை உணர்ந்த விஜயகுமாரி, தான் இறக்கபோகும் நேரத்தில், ஜெமினிகணேசனிடம், தன் தங்கையை கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, கூறுவார்.

ஜெமினிகணேசன் செல்லும்போது, சரோஜாதேவிக்கு திருமணம் நடைபெற்று கொண்டிருக்கும். ஜெமினிகணேசன், தன் குழந்தையை, அவர்களுக்கு கல்யாணப்பரிசாக கொடுக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற, தங்கவேலுவின், 'மன்னார் அண்ட் கோ' நகைச்சுவை மிகவும் பிரபலமானது. படத்திற்கு இசை, ஏ.எம்.ராஜா. பாடல்கள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 'உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட, துள்ளாத மனமும், வாடிக்கை மறந்ததும் ஏனோ...' போன்ற பாடல்கள், இன்றும் நினைத்தாலே இனிக்கும். ஹிந்தியில், நஸ்ரானா; தெலுங்கில், பெல்லி கனுகா; கன்னடத்தில், பிரேமபந்தனா என்ற பெயர்களில், கல்யாண பரிசு, 'ரீமேக்' செய்யப்பட்டது. கல்யாண பரிசு படத்திற்கு பின் தான், தமிழ் திரையுலம் இளமையின் பக்கம் பயணித்தது.

மூலக்கதை