திசை மாறும் முதலீடுகள்

தினமலர்  தினமலர்
திசை மாறும் முதலீடுகள்

கடந்த, 2019ம் ஆண்டின் துவக்கத்தில், ஒட்டு மொத்த சந்தையிலும் அதிகமாக எதிரொலித்த கேள்விகள், ‘‘மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் மீண்டு வருமா?

அவை எவ்வளவு உயரும்?’’ என்பது தான். ஆனால், ஆண்டின் நிறைவில் இந்த எதிர்ப்பார்ப்புகள் அதிகம் தென்படவில்லை. சந்தையில் வளர்ச்சி கண்ட, நிப்டி பங்குகளின் பக்கமாக அனைவரின் கவனமும் மாறிவிட்டது.பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக மதிப்பீட்டில் வர்த்தகமாகும் தனியார் வங்கி பங்குகளையும், நுகர்வு பொருள் துறைசார் பங்குகளையும் மட்டுமே வாங்கும் நிலையில் இருந்தனர்.நிப்டியின் வளர்ச்சியில், இந்த பங்குகள் ஆற்றிய அரும் பணியும், சமீபகால நிகழ்வுகளும், முதலீட்டாளர்களை வழி நடத்தின.கடந்த, 2019ல் நிப்டி, ஒட்டு மொத்த சந்தையையும் மிஞ்சும் வகையில் உயர்ந்த காரணத்தால், அனைவரையும் அதை சார்ந்தே முதலீடு செய்ய வைத்தது.

இந்த ஆண்டின் துவக்கத்தில், மீண்டும் நிப்டி எவ்வளவு உயரும் என்ற கேள்விகள் தான், சந்தையில் அதிகம் ஒலிக்கின்றன.ஆனால், ஜனவரியில் சந்தையின் போக்கு, தலைகீழாக நடப்பது தான் யாரும் எதிர்பாராத நிகழ்வு. இந்த ஆண்டில், நிப்டி இதுவரை, 1.51 சதவீதம் உயர்ந்த நிலையில், அதில் இடம் பெறாத பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன.‘என்.எஸ்.இ., மிட்கேப் 100’ ஜனவரியில், 5.68 சதவீதம் உயர்ந்துள்ளது. அதையும் விஞ்சும் வகையில், ‘என்.எஸ்.இ., ஸ்மால்கேப் 100’ ஜனவரியில், 7.77 சதவீதம் உயர்வு கண்டது. இனி வரும் நாட்களில், இந்த டிரெண்ட் மேலும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு, பல முதலீட்டாளர்களின் மனதில் தோன்றி உள்ளது.

சந்தையின் பார்வை வெகு நாட்களுக்குப் பிறகு, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பக்கம் திரும்ப ஆரம்பித்த உடன், இந்த ஏறுமுகம் ஏற்பட்டது.இது, இன்னும் அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் துாண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அடுத்த இரண்டு வாரங்களில், பட்ஜெட் எதிர்பார்ப்புகளும் கூடும்போது, ஏறும் பங்குகளையே வாங்க அனைவரும் விரும்புவர்.இப்போது இருக்கும் மார்க்கெட் டிரெண்டின் அடிப்படையில், இன்னும் அதிக ஆர்வம், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பக்கம் திரும்பும். அந்த ஆர்வம், பட்ஜெட் சார்ந்து அமையும் சென்டிமென்ட் படி மேலும் வழிமாறும்.

ஒருவேளை, பட்ஜெட் மக்கள் மனநிலையை பிரதிபலித்து, வருங்கால வளர்ச்சிக்கு சாதகமான அறிவிப்புகளுடன் அமைந்தால், அனைத்து பங்குகளும் உயரக்கூடும். அதுவும், குறிப்பாக அரசின் புதிய கொள்கைகளால் பயன் பெறக்கூடிய நிறுவன பங்குகள் அதிகமாக உயரக்கூடும். ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் தொடர்ந்து எடுக்கப் போகும் திசை, பட்ஜெட்டை பொறுத்து அமையும் என்றே தோன்றுகிறது. வரும் வாரங்களில், அவற்றில் எதிர்பார்ப்பு சார்ந்த வர்த்தகம் அதிகமாக இருக்கும். இந்த வர்த்தகத்தை மிக கவனமாக ஆய்வு செய்து, முதலீட்டு முடிவுகள் எடுக்க வேண்டும்.

இந்த சூழலில் அவசர முதலீட்டு முடிவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.அடுத்த இரண்டு வாரங்களுக்கு, பங்கு சந்தை பரபரப்பான சூழலை சந்திக்கும் போது, நிதானமான முதலீட்டு போக்கை எடுப்பது மட்டுமே பயன் அளிக்கும்.

மூலக்கதை