ராகுல் சாதித்தது எப்படி | ஜனவரி 18, 2020

தினமலர்  தினமலர்
ராகுல் சாதித்தது எப்படி | ஜனவரி 18, 2020

ராஜ்கோட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. வழக்கமாக ‘டாப் ஆர்டரில்’ விளையாடும் இந்தியாவின் லோகேஷ் ராகுல், 5வது வீரராக களமிறங்கினார். எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் அசத்திய இவர் 52 பந்தில் 80 ரன்கள் விளாசினார்.

இது குறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில்,‘‘ ஐந்தாவது இடத்திற்கு ஏற்ப, தொழில்நுட்ப ரீதியில் பேட்டிங்கில் வித்தியாசமான பயிற்சியில் ஈடுபடவில்லை. ‘மிடில் ஆர்டரில்’ களமிறங்கிய அனுபவம் உள்ள கேப்டன் கோஹ்லியிடம் பேட்டிங் குறித்து பேசினேன். ‘மிடில் ஆர்டரில்’ விளையாடி உள்ள ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), வில்லியம்சனின் (நியூசிலாந்து) பேட்டிங் ‘வீடியோவை’ பார்த்தேன். எப்படி ரன் சேர்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். இதுதான், ராஜ்கோட் ஒரு நாள் போட்டியில் சாதிக்க கைகொடுத்தது. உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., போட்டிகளில் கீப்பிங் செய்தாலும், இந்திய அணிக்கு இப்பணியை தொடர்வது சவாலாக உள்ளது. சுழற்பந்துவீச்சாளர் குல்தீப், ஜடேஜாவின் கடினமான பந்துவீச்சை ‘கீப்பிங்’ செய்ய திணறுகிறேன்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் டிராவிட், ‘மிடில் ஆர்டரில்’ ரன் சேர்த்து, கீப்பிங்கிலும் ஜொலித்தார். இதைப்போல நானும் செயல்படுவதால் இவருடன் ஒப்பிடுவது பெருமையாக உள்ளது. இருவருக்கும் ராகுல் என்ற பெயர், கர்நாடகா மாநிலம் என பலவிதத்தில் ஒற்றுமை உள்ளது,’’ என்றார்.

மூலக்கதை