ஸ்டோக்ஸ், போப் சதம் | ஜனவரி 17, 2020

தினமலர்  தினமலர்
ஸ்டோக்ஸ், போப் சதம் | ஜனவரி 17, 2020

போர்ட் எலிசபெத்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ், போப் சதம் கடந்தனர்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம நடந்தது. போப், ஸ்டோக்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்டோக்ஸ் (120)  டெஸ்ட் அரங்கில் 8வது சதம் அடித்தார். மஹராஜ் ‘சுழலில்’ பட்லர் (1), சாம் கரான் (44) அவுட்டாகினர். நம்பிக்கையுடன் விளையாடிய போப், முதல் டெஸ்ட் சதம் கடந்தார். மார்க் உட்டை (12) வெளியேற்றிய மஹராஜ், ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 499 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. போப் (135) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக மஹராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து, 439 ரன்கள் பின்தங்கி இருந்தது. எல்கர் (32) அவுட்டாகாமல் இருந்தார்.

ரபாடாவுக்கு தடை

முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் ரபாடா ‘வேகத்தில்’ இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டமிழந்தார். உற்சாகத்தில் ரூட் அருகே சென்ற ரபாடா ஆக்ரோஷமாக கத்தினார். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறிய செயல். இவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர் பெறும் நான்காவது தகுதியிழப்பு புள்ளி. இதனால், ரபாடாவுக்கு இங்கிலாந்துக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் வரும் 24ல் துவங்கும் 4வது டெஸ்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மூலக்கதை