மிதாலி ராஜ் பின்னடைவு: பி.சி.சி.ஐ., ஒப்பந்த பட்டியலில் | ஜனவரி 16, 2020

தினமலர்  தினமலர்
மிதாலி ராஜ் பின்னடைவு: பி.சி.சி.ஐ., ஒப்பந்த பட்டியலில் | ஜனவரி 16, 2020

புதுடில்லி: பி.சி.சி.ஐ., வீராங்கனைகள் ஒப்பந்த பட்டியலில், ‘அனுபவ’ மிதாலி ராஜ் ‘பி–கிரேடுக்கு’ தள்ளப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2019 அக்., முதல் 2020 செப்., வரையிலான 22 வீராங்கனைகள் கொண்ட சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியானது.

கடந்த ஆண்டு ‘ஏ–கிரேடு’ (ரூ. 50 லட்சம்) பட்டியலில் இடம் பெற்றிருந்த ‘சீனியர்’ வீராங்கனை மிதாலி ராஜ் 37, ‘பி–கிரேடுக்கு’ (ரூ. 30 லட்சம்) தள்ளப்பட்டார். கடந்த செப்டம்பரில் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த இவர், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக உள்ளார்.

‘ஏ–கிரேடு’ பட்டியலில் ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ் நீடிக்கின்றனர். கடந்த ஆண்டு ‘சி–கிரேடு’ (ரூ. 10 லட்சம்) பட்டியலில் இருந்த ராதா யாதவ், தனியா பாட்யா ‘பி–கிரேடுக்கு’ உயர்த்தப்பட்டனர்.

சம்பள பட்டியலில் முதன்முறையாக சேர்க்கப்பட்ட ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல் ‘சி–கிரேடு’ பட்டியலில் இடம் பிடித்தனர். கடந்த ஆண்டு ‘சி–கிரேடில்’ இடம் பெற்றிருந்த மோனா மேஷ்ராம் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

‘ஏ–கிரேடு’ (ரூ. 50 லட்சம்): ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ்

‘பி–கிரேடு’ (ரூ. 30 லட்சம்): மிதாலி ராஜ், ஜுலான் கோஸ்வாமி, எக்தா பிஷ்ட், ராதா யாதவ், தனியா பாட்யா, ஷிகா பாண்டே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா

‘சி–கிரேடு’ (ரூ. 10 லட்சம்): வேதா கிருஷ்ணமூர்த்தி, பூனம் ராத், அனுஜா பாட்டீல், மான்சி ஜோஷி, ஹேமலதா, அருந்ததி ரெட்டி, ராஜேஷ்வரி கயக்வாத், பூஜா, ஹர்லீன் தியோல், பிரியா புனியா, ஷபாலி வர்மா.

மூலக்கதை