பழைய கம்ப்யூட்டர்களுடன் மல்லுகட்டும் நிறுவனங்கள்:மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வறிக்கை சொல்லும் செய்திகள்

தினமலர்  தினமலர்
பழைய கம்ப்யூட்டர்களுடன் மல்லுகட்டும் நிறுவனங்கள்:மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வறிக்கை சொல்லும் செய்திகள்

திருவனந்தபுரம்:இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்த, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பழைய கம்ப்யூட்டர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இது உற்பத்தி இழப்பு மற்றும் பாதுகாப்பு பாதிப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது என, மைக்ரோசாப்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தென் மாநிலங்களில் உள்ள, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பழைய கம்ப்யூட்டர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இவற்றால் வேலை இடங்களில் உற்பத்தி பாதிப்பு, பாதுகாப்பு பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகின்றன.
இந்த நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் கம்ப்யூட்டர்கள், புதிய கம்ப்யூட்டர்களுடன் ஒப்பிடுகையில், அவற்றை விட நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழைமையானவை ஆகும். இவை, பழைய ஆப்பரரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுபவை. இதன் காரணமாக, குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலை இடங்களில் உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது.அத்துடன் இதன் காரணமாக, தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட நிறுவன பாதுகாப்பு விஷயங்களிலும் சிக்கல்கள் ஏற்பட ஏதுவாகிறது.இந்த பழைய கம்ப்யூட்டர்கள் புதியதுடன் ஒப்பிடும்போது, குறைந்தபட்சம், நான்கு முறையாவது பழுது பார்க்கப்பட்டவையாக இருக்கின்றன.இதன் காரணமாக, குறைந்தபட்சம், 96 மணி நேரம் மதிப்பிலான உற்பத்தி இழப்புகள் ஏற்படுகின்றன.தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, தரவுகளை மீட்டெடுப்பது, மற்றும் வணிக தொடர்ச்சியை பராமரிப்பது ஆகியவை மிகவும் சவாலானதாக இருக்கிறது.கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வில், தென்மாநிலங்களைச் சேர்ந்த, 25 சதவீத நிறுவனங்கள், பாதுகாப்பு பிரச்னைகளை சந்திக்க நேர்ந்ததாக தெரிவித்துள்ளன.தென்மாநிலங்களை சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில், 40 சதவீத நிறுவனங்கள், காலாவதியான கம்ப்யூட்டர்களை உபயோகித்து வருகின்றன. 62 சதவீத நிறுவனங்கள், விண்டோஸ் மென்பொருளின் பழைய பதிப்புகளையே இன்னும் பயன்படுத்தி வருகின்றன.மாறாக, நவீனத்தை பின்பற்றும் நிறுவனங்கள் வணிகம், ஊழியர்கள், பாதுகாப்பு என பல விஷயங்களில் நன்மை அடைந்துள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில், 89 சதவீத நிறுவனங்கள் புதிய கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதால், அவற்றின் தகவல் தொழில்நுட்ப செயல்திறன் அதிகரித்திருப்பதாக தெரிவித்து உள்ளன.மேலும்,75 சதவீத நிறுவனங்கள் புதிய கம்ப்யூட்டரை பயன்படுத்துவதன் மூலம், மேகக் கணினி உள்ளிட்ட பல வசதிகளையும் பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளன.குறைந்த விழிப்புணர்வு திறன் காரணமாக, சிறிய நடுத்தர நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்கத் தயங்குகின்றன.இவ்வாறு, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத்தின் மதிப்பை அங்கீகரிக்க வேண்டும். அவை வணிகங்களுக்கு பெரும் உதவி செய்யும். அதில் செய்யப்படும் முதலீடு, அவர்களுக்கு இப்போதும், எதிர்காலத்திலும் வளர்ச்சியை கொண்டு வரும்.-பர்ஹானா ஹக் குழு இயக்குனர், சாதனங்கள் பிரிவு, மைக்ரோசாப்ட் இந்தியா.

மூலக்கதை