இளையராஜா - அனிருத் ஒப்பீடு, தர்பார் 'காப்பி' சர்ச்சை காரணமா?

தினமலர்  தினமலர்
இளையராஜா  அனிருத் ஒப்பீடு, தர்பார் காப்பி சர்ச்சை காரணமா?

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தென்னிந்திய சினிமா, ஹிந்தி சினிமா என பல மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து திரையிசையில் ஒரு ராஜாவாகவே இருப்பவர் இளையராஜா.

'தர்பார்' பட இசை வெளியீட்டில் இருபது படங்களுக்கு மட்டுமே இசையமைத்த அனிருத்தை, இளையராஜாவுடன் ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இளையராஜா ரசிகர்கள் உள்ளிட்ட மற்ற இசை ரசிகர்கள் பலரும் அது குறித்து பல கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர். ரஜினிகாந்த் இப்படி பேசியது குறித்து திரையுலகில் உள்ள சிலரிடம் கேட்ட போது அதற்குக் காரணம் ஒன்றை சொன்னார்கள்.

'தர்பார்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'சும்மா கிழி' பாடல் வந்த போது அது தேவா இசையமைப்பில் வெளிவந்த 'தண்ணி குடம் எடுத்து' என்ற பழைய படப் பாடல் ஒன்றின் காப்பி ஆக இருந்ததாக கடும் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை சரியாக்கவே அனிருத்தை, இளையராஜாவுடன் ஒப்பிடும் அளவிற்கு ரஜினிகாந்த் பேசினார் என்கிறார்கள்.

தன் குடும்பத்தைச் சேர்ந்த, தன் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்துக்கு இப்படி ஒரு 'காப்பி' இமேஜ் விழக் கூடாது என்பதற்காக அவருடைய குடும்பத்தினரின் ஆலோசனையில் அவர் இப்படி பேசியிருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், 'தர்பார்' பாடல் அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஒருவேளை போக போக பிடிக்குமோ என்னமோ?

மூலக்கதை