நேபாள வீராங்கனை உலக சாதனை | டிசம்பர் 02, 2019

தினமலர்  தினமலர்
நேபாள வீராங்கனை உலக சாதனை | டிசம்பர் 02, 2019

பொகாரா: மாலத்தீவு அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த், 6 விக்கெட் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.

நேபாளத்தில், 13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள பெண்களுக்கான ‘டுவென்டி–20’ போட்டியில் நேபாளம், மாலத்தீவு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த மாலத்தீவு அணி 10.1 ஓவரில் 16 ரன்னுக்கு சுருண்டது. ஹம்சா நியாஜ் (9), ஹப்சா அப்துல்லா (4) மட்டும் ரன் எடுத்தனர். மற்ற 8 வீராங்கனைகள் ‘டக்–அவுட்’ ஆகினர். அய்மா ஆயிஷாத் (0, 12 பந்து) அவுட்டாகாமல் இருந்தார். நேபாளம் சார்பில் அஞ்சலி சந்த், ‘ஹாட்ரிக்’ உட்பட 6 விக்கெட் கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய நேபாளம் அணி, முதல் ஓவரின் முதல் 5 பந்தில் 17 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஜல் ஸ்ரேஸ்தா (13), சீதா ராணா மாகர் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

புதிய சாதனை

பவுலிங்கில் அசத்திய அஞ்சலி சந்த், 2.1 ஓவரில், ஒரு ரன் கூட வழங்காமல் 6 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் பெண்களுக்கான சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன், இந்த ஆண்டு ஜனவரியில் பாங்காக்கில் நடந்த சீனாவுக்கு எதிரான போட்டியில் மாலத்தீவு வீராங்கனை மாஸ் எலிசா, 4 ஓவரில், 3 ரன் வழங்கி, 6 விக்கெட் கைப்பற்றியது சாதனையாக இருந்தது.

தவிர, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எந்த ஒரு பவுலரும் ஒரு ரன் கூட வழங்காமல் 6 விக்கெட் கைப்பற்றியதில்லை.

மூலக்கதை