வாகன விற்பனை: தொடரும் சரிவு
புதுடில்லி:சமீப காலமாக வாகன விற்பனை தொடர்ந்து சரிவை கண்டு வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்திலும் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பலவற்றின் விற்பனை, சரிவை கண்டுள்ளது.
‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின், நவம்பர் மாத விற்பனை, 1.9 சதவீதம் அளவுக்கு குறைந்து, 1.5 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1.54 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.உள்நாட்டு விற்பனை, 1.6 சதவீதம் குறைந்து, 1.44 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகிஉள்ளன.இதுவே, கடந்த ஆண்டில் இதே மாதத்தில், 1.46 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஏற்றுமதியை பொறுத்தவரை, 7.7 சதவீதம் நவம்பர் மாதத்தில் சரிந்துள்ளது. நவம்பர் மாதத்தில் மொத்தம், 6,944 கார்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில், 7,521 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.