மாற்றம் செய்வாரா கங்குலி | நவம்பர் 30, 2019

தினமலர்  தினமலர்
மாற்றம் செய்வாரா கங்குலி | நவம்பர் 30, 2019

மும்பை: கங்குலி தலைமையில் முதல் முறையாக பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இதில் லோதாகுழு அளித்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புதிய தலைவராக சமீபத்தில், இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி பதவி ஏற்றார். இவரது தலைமையில், முதல் முறையாக பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடக்கவுள்ளது. இதில், உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த லோதா குழுவின் விதிமுறையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாநில சங்கம், பி.சி.சி.ஐ., என இரு அமைப்பிலும் தொடர்ந்து 6 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும். அடுத்த மூன்று ஆண்டுகள் எவ்வித பதவியிலும் இருக்க முடியாது.

ஏற்கனவே மேற்குவங்க கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். பி.சி.சி.ஐ., தலைவராக இன்னும் 10 மாதங்கள் மட்டுமே நீடிக்கலாம். பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா இதே சிக்கலில் உள்ளார். இவர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில், 6 ஆண்டுகள் என்பதில் மாற்றம் செய்யப்படலாம்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கான (ஐ.சி.சி.,), பி.சி.சி.ஐ., பிரதிநிதியாக அனுபவம் வாய்ந்த தமிழகத்தின் சீனிவாசனை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லோதா குழு பரிந்துரைப்படி, 70 வயதுக்கு மேல் யாரும் பதவி வகிக்க முடியாது. இதன்படி, சீனிவாசனை (74 வயது) அனுப்புவதில் சிக்கல் ஏற்படலாம். பிரதிநிதி பதவிக்காக மட்டும் உச்ச வயது 70 என்பது நீக்கப்படலாம்.

மீண்டும் சச்சின்

இந்திய அணி பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் வீரர்களான சச்சின், லட்சுமண், கங்குலி அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழு (சி.ஏ.சி.,) அமைக்கப்பட்டது. இரட்டைப்பதவி தரும் ஆதாய புகார் காரணமாக, கங்குலி தவிர மற்ற இருவரும் விலகினர். இந்நிலையில், இந்திய அணி தேர்வுக்குழுவை புதிதாக அமைக்க சச்சின், லட்சுமணுக்கு மீண்டும் பதவி தரப்படும் எனத்தெரிகிறது.

 

மூலக்கதை