‘இரண்டு சந்தோஷமான தருணங்கள்’.....தோனி நெகிழ்ச்சி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘இரண்டு சந்தோஷமான தருணங்கள்’.....தோனி நெகிழ்ச்சி பேட்டி

புதுடெல்லி: டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்ற அந்த இரண்டு தருணங்கள், தனது வாழ்வின் மிக சந்தோஷமானவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கடந்த 2007ம் ஆண்டு எனது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் கோப்பையை வென்றது.

அந்நிய மண்ணில், அதிலும் வேகப்பந்து வீச்சுக்கு ஏதுவான ஆடுகளங்களில் இந்திய அணியின் இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அந்த கோப்பையுடன் நாங்கள் நாடு திரும்பிய போது, மும்பை ஏர்போர்ட்டில் இருந்து, மரைன் ட்ரைவர் வரை லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று, ஆரவாரமாக வரவேற்பு அளித்தனர்.

மும்பை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் திணறியது. அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.

கோப்பையை வென்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியை போல, மீண்டும் பரவசமான மகிழ்ச்சியில் அனைவரும் ஆழ்ந்து விட்டோம்.

அன்று எத்தனை பேர் விமானம் மற்றும் ரயிலை தவற விட்டார்கள் என்று தெரியவில்லை அதே போல் 2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியிலும் கோப்பையை வென்ற அந்த நிமிடமும் எனது வாழ்வில் மறக்க முடியாது ஒன்று. வெற்றிக்கு தேவை 15 ரன்கள் என்ற நிலையில், வெற்றி உறுதியான அந்த சமயத்தில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ரசிகர்கள் அனைவரும் வந்தே மாதரம் என உற்சாக குரல் எழுப்பினர்.

அப்போது களத்தில் நின்று நான் ஆடிக் கொண்டிருந்தேன். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை