அரையிறுதியில் இளம் இந்தியா | நவம்பர் 18, 2019

தினமலர்  தினமலர்
அரையிறுதியில் இளம் இந்தியா | நவம்பர் 18, 2019

தாகா: வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 120 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

வங்கதேசத்தில், வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் நடக்கிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த இந்திய அணிக்கு ஆர்யன் ஜூயல் (0) ஏமாற்றினார். சன்விர் சிங் (20), அர்மான் ஜாபர் (28) நிலைக்கவில்லை. கேப்டன் ஷரத் (90) நம்பிக்கை அளித்தார். அபாரமாக ஆடிய சின்மே சுடர் சதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சுபம் சர்மா அரைசதமடித்தார்.

இந்திய அணி 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. சின்மே சுடர் (104), சுபம் சர்மா (65) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய ஹாங்காங் அணிக்கு ஷாஹித் வாசிப் (68) ஆறுதல் தந்தார். வாஜித் ஷா (0), நிஜாகட் கான் (15), கேப்டன் ஐசாஸ் கான் (0) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். ஹாங்காங் அணி 47.3 ஓவரில் 202 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் சுபம் சர்மா 4 விக்கெட் கைப்பற்றினார்.

லீக் சுற்றில் முடிவில் 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வி என, 4 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 2வது இடம் பிடித்த இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

தாகாவில் நடக்குவுள்ள முதல் அரையிறுதியில் (நவ. 20) இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை