தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: விண்டீஸ் அணி ஏமாற்றம் | நவம்பர் 17, 2019

தினமலர்  தினமலர்
தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: விண்டீஸ் அணி ஏமாற்றம் | நவம்பர் 17, 2019

லக்னோ: விண்டீசுக்கு எதிரான மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2–1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் மோதின. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி லக்னோவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஜ்ரதுல்லா ஜஜாய் (0), கரீம் ஜனத் (2), இப்ராஹிம் ஜத்ரன் (1) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ரஹ்மானுல்லா குர்பாஜ் (79) அரைசதம் கடந்தார். ஆஸ்கர் ஆப்கன் (24), நஜிபுல்லா ஜத்ரன் (14), முகமது நபி (15) ஓரளவு கைகொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. விண்டீஸ் சார்பில் காட்ரெல், கேஸ்ரிக் வில்லியம்ஸ், கீமோ பால் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

நவீன் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய விண்டீஸ் அணிக்கு சிம்மன்ஸ் (7), பிரண்டன் கிங் (1) ஏமாற்றினர். எவின் லீவிஸ் (24) ஆறுதல் தந்தார். ஷிம்ரன் ஹெட்மயர் (11), கேப்டன் போலார்டு (11) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஷாய் ஹோப் (52) அரைசதம் கடந்தார்.

கடைசி ஓவரில் விண்டீஸ் அணியின் வெற்றிக்கு 34 ரன் தேவைப்பட்டது. நவீன்–உல்–ஹக் வீசிய 20வது ஓவரின் 2வது பந்தில் ஹோல்டர் (6) அவுட்டானார். இந்த ஓவரில் 4 ரன் மட்டுமே கிடைத்தது. விண்டீஸ் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் நவீன்–உல்–ஹக் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் விண்டீஸ் அணிக்கு எதிராக முதன்முறையாக தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

மூலக்கதை