இந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்!

தினமலர்  தினமலர்
இந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்!

புதுடில்லி: ‘இந்திய குடும்பங்களில், தங்கம் கையிருப்பு, 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும்’ என, உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து, கவுன்சிலின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர், சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்க ஆபரணங்கள் குறித்து, உலக தங்க கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இந்திய குடும்பங்களில், 23 ஆயிரம் – 24 ஆயிரம் டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இது, தற்போதைய ஆய்வில், 24 ஆயிரம் – 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியாவில், தங்கத்திற்கான தேவை, 760 டன்னாக இருந்தது. இது, இந்தாண்டு, 750 – 850 டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அன்னியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது; அத்துடன், தங்கம் விலையும் குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 5 சதவீதம் அதிகரித்து, 159 டன்னாக உயர்ந்துள்ளது.

அக் ஷய திருதியை மற்றும் திருமண சீசன் காரணமாக, நடப்பு, ஏப்., – ஜூன் காலாண்டிலும், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தாண்டு, பருவ மழை நன்கு இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கிராமப்புற பொருளாதாரம் நன்கு இருக்கும் என்பதால், தங்கம் விற்பனை உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பு:
இந்திய குடும்பங்களில், தற்போது, 25 ஆயிரம் கோடி டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கையிருப்பில், 608.80 டன், தங்கம் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 40 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை