இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில்; ரியல் எஸ்டேட் வரி அமலாக்கம் ஆய்வு

தினமலர்  தினமலர்
இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில்; ரியல் எஸ்டேட் வரி அமலாக்கம் ஆய்வு

புதுடில்லி: இன்று கூடும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கு குறைக்கப்பட்ட வரி தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்யப்பட உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 34வது கூட்டம், இன்று நடைபெற உள்ளது. ‘காணொலி காட்சி’ மூலம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் பங்கேற்பர்.

கடந்த மாதம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கட்டுமான பணியில் உள்ள வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., 5 சதவீதம்; குறைந்த விலை வீடுகளுக்கு, 1 சதவீதம் என, குறைத்து நிர்ணயிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த புதிய வரி விகிதங்கள், ஏப்ரல், 1 முதல் அமலுக்கு வர உள்ளன. இதன் அமலாக்கம் தொடர்பான அம்சங்கள், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. சிமென்ட் வரி குறைப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என, தெரிகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் புதிய முடிவுகளை எடுக்கவோ அல்லது அறிவிக்கவோ வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஏப்ரல் முதல் அமல்!
குடியிருப்புகளுக்கான, ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., 8 சதவீதத்தில் இருந்து, 1 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல், 1 முதல், புதிய வரி விகிதம் அமலுக்கு வர உள்ளது. புதிய வரி விதிப்பின் கீழ், கட்டுமான நிறுவனங்கள் உள்ளீட்டு வரிப் பயன் பெற முடியாது.

மூலக்கதை