2 ஆண்டுகளுக்கு பிறகு மாட்ரிட் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2 ஆண்டுகளுக்கு பிறகு மாட்ரிட் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் இந்த ஆண்டு ஆடுகிறார் என போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் களிமண் தரையில் (கிளே கோர்ட்) அவர் கால் பதிக்க உள்ளார் என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். 2018ல் ஆஸி.

ஓபன் பட்டம் வென்ற அவர், தொடர்ந்து இந்த ஆண்டும் நம்பிக்கையுடன் ஆஸி. ஓபனில் பங்கேற்றார்.

ஆனால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிரேக்க வீரர் ஸ்டெபனாசிடம் அவர் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தார்.

இந்நிலையில் மே மாதம் ஸ்பெயினில் நடைபெற உள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் ஆடவுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக அவர் மாட்ரிட் ஓபனில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாட்ரிட்டில் ஆடினால், மே கடைசியில் துவங்க உள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆட உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பெடரர் உள்ளார்.

இரண்டு போட்டிகளுமே கிளே கோர்ட் போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ல் கடைசியாக மாட்ரிட்டில் பட்டம் வென்ற பெடரர், அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி சுற்றுகளில் வெளியேறி விட்டார்.

இதுவரை அவர் 3 முறை இங்கு பட்டம் வென்றுள்ளார்.
இந்த ஆண்டு மாட்ரிட் ஓபனில் கிளே கோர்ட் ஸ்டார் பிளேயர், ஸ்பெயினின் ரபேல் நடாலும் ஆடுகிறார். இவர் 5 முறை மாட்ரிட் ஓபன் பட்டம் வென்றுள்ளார்.

மேலும் ஆடவர் தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள செர்பியாவின் ஜோகோவிச்சும், மாட்ரிட் ஓபனில் ஆடவுள்ளார்.

முன்னணி வீரர்கள் அனைவரும் பங்கேற்பதால் இந்த ஆண்டு மாட்ரிட் ஓபன் டென்னிஸ் களை கட்டும் என்று டென்னிஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை