அட்லீ என்ன கதை எழுதியிருப்பார்???

தினமலர்  தினமலர்
அட்லீ என்ன கதை எழுதியிருப்பார்???

தமிழ் சினிமாவில் சில கூட்டணிகளை எப்போதும் அவ்வளவு சீக்கிரம் பிரிக்க முடியாது. ரஜினிகாந்த் - எஸ்பி முத்துராமன், கமல்ஹாசன் - சிங்கீதம் சீனிவாசராவ் போன்ற முந்தைய கூட்டணிகளைப் போலவே இந்தக் காலத்தில் அஜித் - சிவா, விஜய் - அட்லீ கூட்டணியைச் சொல்லலாம்.

ஒரு 'இலகுவான கூட்டணி' என்று இவற்றைச் சொல்லலாம். நடிகர் என்ன நினைப்பார் என்பது இயக்குனருக்குத் தெரிந்து அதற்கேற்றபடியான கதைகள், காட்சிகள் அமைத்து பரஸ்பரம் ஒரு புரிதலுடன் இப்படிப்பட்டக் கூட்டணிகள் பயணிக்கும்.

'தெறி, மெர்சல்' ஆகிய இரண்டு வசூல் ரீதியான வெற்றிப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அட்லீயுடன் விஜய் நடிக்கும் அவருடைய 63வது படம் நேற்று ஆரம்பமானது.

ஒரு பக்கம் அஜித்தின் 'விஸ்வாசம்' வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், விஜய், அட்லீ கூட்டணியின் இந்தப் புதிய பட ஆரம்பம் நேற்று நடந்ததால் சமூக வலைத்தளங்கள் மீண்டும் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களால் சாக்கடையானது. தரக் குறைவான வார்த்தைகளுடன் நேற்று காலையிலிருந்தே 'டிரென்டிங்' என்ற பெயரில் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

சந்தடி சாக்கில் 'தெறி, மெர்சல்' படங்களைப் போல எந்த பழைய படத்தைப் பார்த்து அட்லீ கதை எழுதியிருப்பார் என பலரும் கேட்கத் தவறவில்லை. அட்லீ இதற்கு முன் எழுதிய 'மௌனராகம்' படக் கதை, 'ராஜா ராணி' ஆக, 'சத்ரியன்' படக் கதை 'தெறி' ஆக, 'அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம்' படங்களின் கதை, 'மெர்சல்' ஆக மாறியதைப் போல இந்தப் புதிய படம் எந்தப் படத்தின் கதையாக இருக்கும் என்ற விவாதமும் போய்க் கொண்டிருக்கிறது.

யார் என்ன சொன்னாலும், படம் வெற்றி பெறுவதால், அட்லீ வழியைத் தற்போது மேலும் சில இயக்குனர்களும் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.

மூலக்கதை