ரூ.100 கோடி டிபாசிட் செய்ய 24 மணி நேர கெடு; போக்ஸ்வேகனுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தினமலர்  தினமலர்
ரூ.100 கோடி டிபாசிட் செய்ய 24 மணி நேர கெடு; போக்ஸ்வேகனுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடில்லி : சுற்றுச்சூழல் மாசு தொடர்பான வழக்கில், ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம், இன்று மாலை, 5:00 மணிக்குள், 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், போக்ஸ்வேகன் நிறுவனம், அதன் வாகனங்களில், சுற்றுச்சூழல் மாசு குறைவாக இருப்பது போல சாப்ட்வேரில் தில்லுமுல்லு செய்தது அம்பலமானது. இதையடுத்து, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சந்தைகளில், 1.10 கோடி கார்களில் சாப்ட்வேர் மோசடி நடந்ததை, போக்ஸ்வேகன் ஒப்புக் கொண்டது.

இந்நிலையில், போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் சில மாடல் கார்கள், ‘பாரத் ஸ்டேஜ் – 4’ விதிகளை மீறி, இரு மடங்கு அதிகமாக காற்று மாசு வெளியிடுவதாக, இந்திய வாகன ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.இடைக்கால இழப்பீடுஇதையடுத்து, 2015ல், மூன்று லட்சத்து, 23 ஆயிரத்து, 700 கார்களை, அந்நிறுவனம் திரும்பப் பெற்று, சரி செய்து கொடுத்தது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசு விதிகளை மீறிய போக்ஸ்வேகன் கார்களுக்கு தடை கோரி, சலோனி அயிலாவாடி உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதில், போக்ஸ்வேகன், சுற்றுச்சூழல் பாதிப்பிற்காக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, இடைக்கால இழப்பீடாக, 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என, 2018, நவ., 16ல், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு, நேற்று தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர், ஆதர்ஷ் குமார் கோயல் முன்னிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, போக்ஸ்வேகன், 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த, தீர்ப்பாய தலைவர், வெள்ளி மாலை, 5:00 மணிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனக் கூறி, வழக்கை தள்ளி வைத்தார்.

இந்தியாவில் விற்பனை செய்த கார்களில், சாப்ட்வேர் தில்லுமுல்லு எதுவும் செய்யவில்லை. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். எனினும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, 100 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்படும்.போக்ஸ்வேகன் செய்தி தொடர்பாளர்

மூலக்கதை