வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அபார வெற்றி: தொடரை 2-0 என கைப்பற்றியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அபார வெற்றி: தொடரை 20 என கைப்பற்றியது

ஹாமில்டன்: நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 373 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

ஜீத் ராவல் 84, கிராண்ட்ஹோமி 58 ரன்கள் விளாசினர். கேப்ரியல் 4, கீமர் ரோச் 3, மிகுல் கம்மின்ஸ் 2, ரெய்பர் 1 விக்கெட் கைப்பற்றினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 66 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 4, சவுத்தி, கிராண்ட்ஹோமி, நீல் வாக்னர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

152 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 107, கேப்டன் கேன் வில்லியம்சன் 54 ரன்கள் எடுத்தனர்.



வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், மிகுல் கம்மின்ஸ் 3, ரோஸ்டன் சேஸ், கேப்ரியல் தலா 2, ரெய்பர் 1 விக்கெட் கைப்பற்றினர். இதன்பின் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக கடினமான இலக்குடன் கடைசி இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி கொண்டிருந்தது.

கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 13, ஷாய் ஹோப் 1 ரன்களுடன் இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் 240 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 64 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 20, ஷாய் ஹோப் 23 என மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில், நீல் வாக்னர் 3, சவுத்தி, டிரென்ட் போல்ட், சாண்ட்னர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியிலும், இன்னிங்ஸ் மற்றும் 67 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

இதன்பின் தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. முதலில் ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது.

இதன் முதல் போட்டி, டிசம்பர் 20ம் தேதி நடைபெறுகிறது.



.

மூலக்கதை