சாதியின் காரணமாக காயத்ரிக்கு ஆதரவா? - கமல் கடும் கோபம்

தினமலர்  தினமலர்
சாதியின் காரணமாக காயத்ரிக்கு ஆதரவா?  கமல் கடும் கோபம்

'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமான நாளிலிருந்தே கமல்ஹாசன் சிலரிடம் மட்டும் கனிவாக நடந்து கொள்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்கள் பலரிடம் இருந்து வந்தது. குறிப்பாக வையாபுரி, காயத்ரி, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோரிடம் அவர் அதிகமான கண்டிப்பைக் காட்டவில்லை என்றார்கள்.

ஓவியா சொல்லாத ஒன்றை ஜுலி சொன்னதாக மற்றவர்களை நம்ப வைத்த போது, ஜுலிக்காக ஒரு குறும்படத்தைக் காட்டினார்கள். அதே சமயம், காயத்ரி நிகழ்ச்சியில் பல கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதை கமல்ஹாசன் கண்டும் காணாமல் இருக்கிறார் என்றார்கள். ஆனால், ஓவியா வெளியேறிய பிறகு காயத்ரியிடம், கமல்ஹாசன் கடுமையான கண்டிப்பைக் காட்டினார். காயத்ரி அடிக்கடிப் பேசும் கெட்ட வார்த்தை என்பதைச் சுட்டிக் காட்ட கமல்ஹாசன் செய்த செய்கை நேயர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

சனிக் கிழமையும் போட்டியாளர்கள் கமல்ஹாசன் மைக்கை மூடிக்கொண்டு பேசுதல் பற்றி சொல்லி பழைய போட்டியாளர்களுடன் உரையாடாமல் புறக்கணித்தார். நேற்று, ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்க்கப்பட்டதைப் போல காயத்ரி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது காயத்ரியுடன் உரையாடிய கமல்ஹாசன் நேயர்கள் மீதான அவருடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.

“நீங்க (காயத்ரி) மட்டும் என்னைப் பார்த்து கெட்ட வார்த்தை பேசவில்லை, இவர்களிலும் கொஞ்ச பேர் (நேயர்கள்) பேசுகிறார்கள். அதை நான் மன்னிக்கவே மாட்டேன். சாதியின் காரணமாக உங்க (காயத்ரி) கிட்ட நான் கனிவா இருக்கிறன்னு பேசறாங்க. அது எவ்வளவு பெரிய அசிங்கம் எனக்கு... ஏன், உங்களுக்கும்தான்.

எனக்கு அது உண்டா. என்னைப் பார்த்து அப்படி சொன்னதுக்கு நான் காத்துக்கிட்டிருந்தேன். அப்படிலாம் பேசாதீங்க. ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டிருக்கேன் அந்த மாதிரி. என்னைப் பத்தி எப்படி வேணா கிண்டல் பண்ணுங்க, ஆனால், அந்த மாதிரி சொல்லாதீங்க. அதுதான் பெரிய கெட்ட வார்த்தை, நம்மை அழித்துக் கொண்டிருக்கும் கெட்ட வார்த்தை,” அவர் மீதான விமர்சனங்களை வைத்த அந்த கொஞ்ச நேயர்களைப் பற்றி கடுமையாகக் கோபப்பட்டார் கமல்ஹாசன்.

காயத்ரியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வார எவிக்ஷனுக்காக, யார் யார் நாமினேஷன் செய்யப்படப் போகிறார்கள் என்பது இன்று இரவு நிகழ்ச்சியில் தெரிய வரும். ரைசா நாமினேட் செய்யப்பட்டால் அவரை இந்த வாரம் வெளியேற்றும் முடிவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மூலக்கதை