விரைவில் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள நிலையில் ஸ்லிப் பீல்டிங்கில் இந்தியா தடுமாற காரணம் என்ன? புஜாரா ஓபன் டாக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விரைவில் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள நிலையில் ஸ்லிப் பீல்டிங்கில் இந்தியா தடுமாற காரணம் என்ன? புஜாரா ஓபன் டாக்

டெல்லி: இந்தியா-இலங்கை இடையே, டெல்லியில் நடைபெற்று வந்த 3வது மற்றும்  கடைசி டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. எனினும் 2வது டெஸ்ட்டில் கிடைத்திருந்த வெற்றியின் மூலம் 1-0 என இந்தியா தொடரை கைப்பற்றியது.

முதல் டெஸ்ட்டும் டிராவில் முடிவடைந்திருந்தது. 3வது டெஸ்ட்டில் இந்தியாவின் பீல்டிங் மோசமாக இருந்ததும் கூட டிரா ஆனதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

முதல் இன்னிங்ஸில், இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 6 ரன்களில் இருந்தபோது இந்திய கேப்டன் கோஹ்லியும், 98 ரன்களில் இருந்தபோது ரோகித் சர்மாவும் கேட்ச்சை தவற விட்டனர். அப்போது இருவருமே 2வது ஸ்லிப்பில் நின்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



அவர் 104 ரன்களில் இருந்தபோது, மிட் ஆப் திசையில் நின்ற விஜய் சங்கர், மீண்டும் ஒரு கேட்ச்சை தவற விட்டார். இதை பயன்படுத்தி கொண்ட ஏஞ்சலோ மேத்யூஸ் 111 ரன்கள் விளாசினார்.

இந்தியாவின் பீல்டிங் நன்றாக இருந்திருந்தால், போட்டியில் சிறந்த முடிவு கிடைத்திருக்க கூடும் என கோஹ்லியும் ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் கடினமான தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில், பீல்டிங்கில் இந்தியா தடுமாற்றம் காண்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.   இது குறித்து இந்தியாவின் முன்னணி வீரர் புஜாரா கூறுகையில், ‘’நாங்கள் பல கேட்ச்களை பிடிக்கவில்லை (ஸ்லிப்களில்).

ஆனால் நிச்சயமாக அதில் மாற்றம் கண்டு முன்னேற்றம் அடைவோம். ஒட்டுமொத்தமாக பார்த்தால், பீல்டிங் துறையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆனால் ஸ்லிப் பீல்டிங்கில்தான் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.

இதற்கென வெளிநாட்டு தொடர்கள் முழுவதிலும் சில வீரர்களை தனியாக ஒதுக்குவோம்.

ஸ்லிப்பில் நிற்கப்போகும் சில வீரர்களை முழுமையாக தயார்படுத்துவோம். நாங்கள் இதைப்பற்றி ஏற்கனவே பேசி விட்டோம்.

எனினும் தென் ஆப்ரிக்கா சென்றடைந்ததும் இதைப்பற்றி இன்னும் அதிகமாக விவாதிப்போம். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் நன்றாக பீல்டிங் செய்யவில்லை.

அதை ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், ஸ்லிப்பில் பீல்டிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள் காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை அந்த இடத்தில் பீல்டிங் செய்ய வைக்க வேண்டிய நிலையும் எங்களுக்கு ஏற்பட்டது.

நமது பீல்டிங் சிறப்பாக அமைய நாங்கள் கடினமாக உழைக்கிறோம்.

அனைத்து வீரர்களும் ஸ்லிப்பில் நின்று 50 முதல் 100 கேட்ச்கள் வரை பிடிக்கின்றனர் (தினசரி பயிற்சியில்).

முன்னேற்றம் காண நாங்கள் முயல்கிறோம். இறுதியில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்’’ என்றார்.   டெஸ்ட் தொடரை தொடர்ந்து, இந்தியா-இலங்கை அணிகள் 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதுகின்றன.

ஒரு நாள் போட்டிகள் முறையே டிசம்பர் 10, 13, 17ம் தேதிகளிலும், டி20 போட்டிகள் முறையே டிசம்பர் 20, 22, 24ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. இதன்பின் இந்திய அணி தென் ஆப்ரிக்கா செல்கிறது.


.

மூலக்கதை