நடிகர் லால் மகன் மீது துணை நடிகை பாலியல் புகார்

தினமலர்  தினமலர்
நடிகர் லால் மகன் மீது துணை நடிகை பாலியல் புகார்

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் லால். மலையாளத்தில் பல படங்களை தயாரித்துள்ளார், இயக்கியும் உள்ளார். இவரது மகன் ஜீன்பால். இவர் ஹனி பீ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெறவும் இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கினார். அதில் பாவனா நடித்தார். இதுதவிர ஹாய் ஐஏம் டோனி படத்தையும் இயக்கியுள்ளார்.

தற்போது ஜீன்பால் மீது மலையாள துணை நடிகை ஒருவர் கொச்சி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நான் ஜீன்பால் இயக்கிய ஹனிபீ இரண்டாம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன். படம் வெளிவந்த பிறகும் எனக்கு பேசிய படி சம்பளம் தரவில்லை. இதற்காக பலமுறை முயற்சித்தும் பலன் இல்லை. ஒரு முறை அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்தால் சம்பள பாக்கியை தருவதாக கூறினார். அதை நம்பி நானும் சென்றேன்.

அப்போது ஓட்டல் அறையில் இயக்குனர் ஜீன்பால், நடிகர் ஸ்ரீநாத் பாசி, டெக்னீஷியன்கள் அனூப், அனிருத் ஆகியார் இருந்தனர். நான் எனது சம்பள பாக்கியை கேட்டேன். சம்பளப் பாக்கி வேண்டும் என்றால் எங்களுடன் ஓட்டலில் தங்க வேண்டும் என்றார். அவரது தவறான நோக்கத்தை புரிந்து கொண்டு திரும்பி வந்துவிட்டேன். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கொச்சி பனங்காடு போலீசார் இயக்குனர் ஜீன்பால் உள்ளிட் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மூலக்கதை