கமலின் நிழல் சந்திரஹாசன்

PARIS TAMIL  PARIS TAMIL
கமலின் நிழல் சந்திரஹாசன்

 கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் தனது 82வது வயதில் காலமானார் என்று ஒரு வரி செய்தியில் கடந்து விட முடியாது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள் கமல் விஷயத்தில் அண்ணன் உடையான் அனைத்துக்கும் அஞ்சான் என்பதே பொருத்தமாக இருக்கும். தம்பிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் பற்றி கதைகளில் படித்திருக்கலாம், வரலாற்றில் கண்டிருக்கலாம். ஆனால் நம் கண் முன்னால் வாழ்ந்து காட்டியவர் சந்திரஹாசன்.

 
சாருஹாசன் மூத்த அண்ணனாக இருந்தாலும் சந்திரஹாசன் தான் கமலுக்கு எல்லாமுமமாக இருந்தார். சாருஹாசன் கமலுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு கொள்வார். அதனால் கமல் அவரிடமிருந்து சற்று விலகியே இருப்பார், ஆனால் சந்திரஹாசனுடன் எப்போதும் இருப்பார்.
 
களத்தூர் கண்ணம்மாவில் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது கமலை தோளில் தூக்கிக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்றவர் சந்திரஹாசன். அன்று முதல் தனது கடைசி காலம் வரை கமலை தோளில் தூக்கிச் சுமந்தவர். வழக்கறிஞராக இருந்தாலும் அதையும் தம்பிக்காகவே பயன்படுத்தினார். அடிக்கடி சர்ச்சையிலும், பிரச்சினையிலும் சிக்குகிறவர் கமல், அவரை அதிலிருந்து பக்குவமாக வெளியே கொண்டு வருகிறவர் சந்திரஹாசன்.
 
சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிற்கே செலவு செய்கிறவர் கமல். அதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து சரியான படி செய்கிறவர் சந்திரஹாசன். பல முறை பெரும் கடனில் மூழ்க இருந்த கமலை தன் சட்ட அறிவால் சாதுர்யத்தால் காப்பாற்றியவர் சந்திரஹாசன். விஸ்வரூபம் பிரச்சினையின்போது கமல் மனதளவிலும், பொருளாதார அளவிலும் பாதிக்கப்பட்டபோது அவரை விட்டு விலகாமல் மன தைரியம் கொடுத்தவர் சந்திரஹாசன். ராஜ்கமல் பிலிம் இண்டர் நேஷனலின் நிர்வாகியாக இருந்து அதனை திறம்பட வழி நடத்தியவர். கலைஞனுக்கு பொருளாதார பிரச்னை வந்தால் அவனது படைப்பாற்றல் போய்விடும் என்பார்கள். கமலுக்கு அப்படி ஒரு நிலை வராமல் கடைசி வரை காப்பாற்றியவர் சந்திரஹாசன்.
 
கமலின் அண்ணன் என்கிற இமேஜை எந்த இடத்திலும் பயன்படுத்திக் கொள்ளாதவர். மிக எளிமையானவர். வீட்டிலிருந்து நடந்தே அலுவலம் வருவார், போவார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுன் எளிமையாக பழகுகிறவர். நடிக்கும் ஆர்வம் கிடையாது என்றாலும் நண்பர்கள் வற்புறுத்தலுக்காக ஒரு சில படங்களில் நடித்தார்.
 
கடைசி வரை கமலுக்கு துணையாக இருந்தவர் தன் உடல் நலம் குன்றி இறுதி காலத்தை நெருங்குவதை உணர்ந்தும், கமலுக்கு சுமையாக இருக்க கூடாது என்று அவரிடம் சொல்லிவிட்டே தன் மகளின் வீட்டில் வாழ லண்டன் சென்றார் சந்திரஹாசன், சென்றவர் திரும்பவே இல்லை. கமல் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும், உலகப்பெரும் நடிகராக வளர வேண்டும் என்று விரும்பினார் சந்திரஹாசன். அதைத்தான் கமல் தன் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
 
"நண்பனாய், நல்லாசானாய், தமையனும், தகப்பனுமாய், அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக்கூட நான் நிறைவேற்றவில்லை" என்று உருகியிருக்கிறார் கமல்.
 
மொத்தத்தில் சந்திரஹாசன், கமலின் நிழல் என்றே சொல்லலாம்.

மூலக்கதை