'பாகுபலி-2'வை விட பவர் பாண்டி மீது நம்பிக்கை வைத்தவர்

தினமலர்  தினமலர்
பாகுபலி2வை விட பவர் பாண்டி மீது நம்பிக்கை வைத்தவர்

ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி, சாயாசிங் நடிப்பில் 'பவர் பாண்டி' மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் தனுஷ். தனுஷின் இயக்கத்தில் முதல் படமாக உருவாகி வரும் 'பவர் பாண்டி' படத்தின் புரமோஷன்களில் தன் பெயரை அடக்கி வாசிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம் தனுஷ்.

தன் குடும்பத்துக்கு நன்றிக்குரியவராக இருக்கும் ராஜ்கிரண், மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகிய இரண்டு பேருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று படக்குழுவுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம் தனுஷ். அதனாலேயே பவர்பாண்டி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த தனுஷ் அதிகமாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை.

''மனிதர்களுக்குள் நல்லதும் இருக்கும்... கெட்டதும் இருக்கும். பாசிட்டிவான விஷயங்களை மட்டும் முன்னெடுத்துச் சென்றால் நம் வாழ்வில் வெற்றி பெறலாம் என்ற கருத்தை மையமாக வைத்து தான் 'பவர் பாண்டி' படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படத்தில் ராஜ்கிரண் சார் நடிக்க சம்மதித்ததை பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன். அவருடைய 'மாயாண்டி' கேரக்டர்தான் எங்கள் குடும்பத்திற்கே பெரிய உத்வேகத்தைக் கொடுத்த கேரக்டர். அந்தவகையில், என் முதல் படத்திலும் அவரை நாயகனாக்கியிருப்பதை பெரிதாக நினைக்கிறேன்.'' என்று அடக்கி வாதித்தார்.

ஆனால் அந்தப்படத்தில் நடித்த மற்றவர்கள் தனுஷை பாராட்டித்தள்ளிவிட்டார்கள். எல்லோரையும்விட, 'கே புரொடக்ஷன்' ராஜாராஜன் பேச்சு, 'பவர் பாண்டி' படத்துக்கே பெரிய ப்ளஸ்ஸாகிவிட்டது. 'பாகுபலி 2' படத்தின் தமிழக உரிமையை வாங்கி இருக்கும் இவர் பவர் பாண்டி படத்தின் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

அவர் பேசும்போது, ''நான் தனுஷின் தீவிர ரசிகன். தொடர்ந்து ஹிட் படங்களாக அவர் கொடுத்து வருகிறார். மற்ற படங்களைவிட நான் 'பவர் பாண்டி' மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. சொல்லப்போனால், 'பாகுபலி 2'வைவிட 'பவர் பாண்டி'யை பெரிதாக நம்புகிறேன்!'' என்றார்.

மூலக்கதை