மட்டக்களப்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
மட்டக்களப்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

மட்டக்களப்பு- திருகோணமலை மாவட்டங்களுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர், விமல்ராஜ் நேசன் நேற்றிரவு மர்ம நபர்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடியில் உள்ள, அவரது வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

நேற்றிரவு 7 மணியளவில், உந்துருளி ஒன்றில் வந்த இரண்டு மர்ம நபர்கள், பேச வேண்டும் என்று கூறி அழைத்து, விமல் ராஜ் நேசன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரைச் சுட்டவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகின்ற நிலையில், இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, முல்லைத்தீவில் இருந்து மட்டக்களப்புக்கு பேருந்து ஒன்றில்  ரி-56 துப்பாக்கியை எடுத்து வந்தார்கள் என்ற குற்றச்சாட்டில், ஊறணி பகுதியில் வைத்து, நேற்றுமுன்தினம் இரவு மூன்று பேரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் கூறியிருந்தனர்.

இவர்களில் முன்னாள் போராளிகளான இருவர் முல்லைத்தீவு – தேவிபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும், மூன்றாவது நபர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.

மூலக்கதை