அபிவிருத்தி சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு – சபாநாயகர் அறிவிப்பு

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
அபிவிருத்தி சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு – சபாநாயகர் அறிவிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள, அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளதாகவும், கிழக்கு மாகாணசபை இதற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் மாகாணசபைகளின் ஒப்புதலுடனேயே நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், இந்தச் சட்டமூலம் முதலில் மாகாணசபைகளுக்கு அனுப்பப்பட்ட போது, அனைத்து மாகாணசபைகளும் அதனை நிராகரித்திருந்தன.

மாகாணசபைகளின் அதிகாரங்களில் தலையீடு செய்வதாக உள்ளது என்று இந்த சட்ட மூலம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, சில திருத்தங்களுடன் மீண்டும் மாகாணசபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வடக்கு மாகாணசபையின் அமர்வில் இந்த சட்டமூலம் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானது என்று அனைத்து உறுப்பினர்களாலும் நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அறிவித்தார்.

அதேவேளை, தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரையில், இந்தச் சட்டமூலத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதை நிறுத்தி வைத்திருப்பதாக, கிழக்கு மாகாணசபையினால் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய, வடமேல், சப்ரகமுவ, மேல், தென், மற்றும் ஊவா மாகாணசபைகள் இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

வடமத்திய மாகாணசபை இன்னமும் இந்த அபிவிருத்தி சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மாகாணசபைகளின் இந்தக் கருத்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலக்கதை