புனே அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமனம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 10வது சீசனில் களமிறங்கும் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன. இதனால் 2016 சீசனில் புதிதாக ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டன. புனே அணியின் கேப்டனாக டோனி செயல்பட்டார்.அந்த அணி 14 லீக் ஆட்டங்களில் 5 வெற்றி மட்டுமே பெற்று 7வது இடத்தை பிடித்தது. நடப்பு சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற உள்ள நிலையில், புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்கிறார். டோனி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக அணியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘டோனி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். எங்கள் அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக அவர் நீடிப்பார். கேப்டன் பதவியில் இருந்து அவராக விலகவில்லை. எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான எங்கள் அணியின் கேப்டனாக ஸ்மித்தை நியமித்துள்ளோம். கடந்த சீசனில் எங்கள் அணி சிறப்பாக செயல்படவில்லை. எனவே, இந்த முறை அணியை வழிநடத்தவும், வலுவானதாக கட்டமைக்கவும் ஒரு இளம் வீரரை தலைமை பொறுப்பில் நியமிக்க முடிவு செய்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி சமீபத்தில் விலகியதைத் தொடர்ந்து, மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்குமான கேப்டனாக விராத் கோஹ்லி பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐபிஎல் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது தலைமையில் சிஎஸ்கே அணி 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன் 2010, 2014ல் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. இது வரை 143 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி உள்ள டோனி 3271 ரன் (சராசரி 39.40) குவித்துள்ளார்.

மூலக்கதை