கிழக்கு மண்டலம் சாம்பியன்

தினகரன்  தினகரன்

மும்பை: மேற்கு மண்டல அணியுடனான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற கிழக்கு மண்டலம், 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சையது முஷ்டாக் அலி டி20 கோப்பையை கைப்பற்றியது. மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மேற்கு - கிழக்கு மண்டல அணிகள் மோதின. டாசில் வென்ற கிழக்கு மண்டலம் முதலில் பந்துவீசியது. மேற்கு மண்டலம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது. ஷெல்டன் ஜாக்சன் 52, கேப்டன் பார்திவ் பட்டேல் 17, ஆதித்யா தாரே 1, ஹூடா 19, பிரேரக் மன்கட் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ருஜுல் பட் 36, இர்பான் பதான் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.கிழக்கு மண்டல பந்துவீச்சில் பிரீதம் தாஸ் 2, பிரதான், கோஷ், பிரக்யான் ஓஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிழக்கு மண்டலம் களமிறங்கியது. அருண் கார்த்திக், விராத் சிங் இருவரும் துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 31 பந்தில் 61 ரன் சேர்த்தது. அருண் 24 ரன் எடுத்து ஷர்துல் தாகூர் வேகத்தில் விக்கெட் கீப்பர் பார்திவ் வசம் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து விராத் சிங் - இஷாங்க் ஜக்கி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 80 ரன் விளாசியது. இருவரும் அரை சதம் அடித்தனர். சிக்கராகப் பறக்கவிட்ட ஜக்கி 56 ரன் எடுத்து (30 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) தாகூர் வேகத்தில் பார்திவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கிழக்கு மண்டலம் 13.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து அபாரமாக வென்றது.விராத் சிங் 58 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் மனோஜ் திவாரி 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிழக்கு மண்டல அணி 4 லீக் ஆட்டத்தில் 16 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடம் பிடித்து சையத்ய் முஷ்டாக் அலி டிராபியை கைப்பற்றியது. தென் மண்டலத்துடன் நேற்று மோதிய மத்திய மண்டலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று 12 புள்ளிகளுடன் (3 வெற்றி, 1 தோல்வி) 2வது இடம் பிடித்தது. தென் மண்டலம் 20 ஓவரில் 181/7 (விஷ்ணு 31, தினேஷ் கார்த்திக் 35, கேப்டன் விஜய்ஷங்கர் 40, தேஷ்பாண்டே 33*); மத்திய மண்டலம் 20 ஓவரில் 184/8 (ஹர்பிரீத் சிங் 92, அமன்தீப் காரே 39). தெற்கு, மேற்கு, வடக்கு மண்டல அணிகள் தலா 4 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது (1 வெற்றி, 3 தோல்வி).

மூலக்கதை