இந்தியா ஏ 176/4

தினகரன்  தினகரன்

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இந்தியா ஏ  அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்துள்ளது. முன்னதாக, ஆஸி. அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மும்பை, பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்தது.கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 107 ரன் (161 பந்து,  12 பவுண்டரி, 1 சிக்சர்), ஷான் மார்ஷ் 104 ரன் (173 பந்து, 11 பவுண்டரி, 1  சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர் (ரிடயர்டு அவுட்). ஹேண்ட்ஸ்கோம்ப்  45 ரன் எடுத்தார். மிட்செல் மார்ஷ் 16, மேத்யூ வேட் 7 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். வேட் 64 ரன், எம்.மார்ஷ் 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன் என்ற ஸ்கோருடன் (127 ஓவர்) முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. மேக்ஸ்வெல் 16 ரன், ஓ கீப் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா ஏ அணி பந்துவீச்சில் சாய்னி 2, ஹர்திக் பாண்டியா, நதீம், ஹெர்வாத்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஹெர்வாத்கர், பாஞ்ச்சால் களமிறங்கினர். ஹெர்வாத்கர் 4 ரன் எடுத்து நாதன் லியான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பாஞ்ச்சால் 36 ரன் எடுத்து லியான் சுழலில் ஹேண்ட்ஸ்கோம்ப் வசம் பிடிபட்டார். அங்கித் பாவ்னே 25, கேப்டன் ஹர்திக் பாண்டியா 19 ரன் எடுத்து ஜாக்சன் பேர்டு பந்துவீச்சில் வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் 85 ரன் (93 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ரிஷப் பன்ட் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை