கோஹ்லியை விரைவில் வீழ்த்த திட்டங்கள் வகுத்துள்ளோம் - ஆஸி.கேப்டன் ஸ்மித் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோஹ்லியை விரைவில் வீழ்த்த திட்டங்கள் வகுத்துள்ளோம்  ஆஸி.கேப்டன் ஸ்மித் பேட்டி

மும்பை: இந்தியாவுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான  ஆஸி. அணி இந்தியா வந்துள்ளது.

முதல் டெஸ்ட் புனேவில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக  மும்பையில் இந்திய ஏ அணியுடன் 3 நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வரும் 17ம் தேதி முதல் விளையாட உள்ளது.

இதற்காக மும்பை வந்துள்ள ஆஸி. அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சிக்கு இடையே ஆஸி. கேப்டன் ஸ்மித் அளித்த பேட்டி: இந்திய அணியுடன் அவர்களின் சொந்த மண்ணில் விளையாடுவது கடும் சவால் நிறைந்தது.   இந்தியாவுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் எங்கள் கிரிக்கெட் வாழ்வை திரும்பிப் பார்க்கும்போது அது முக்கியமான ஒன்றாக இருக்கும்.

6 சிறந்த பேட்ஸ்மேன்களை இந்தியா கொண்டுள்ளது. அவர்களை வீழ்த்த எங்களால் முடியும்.

சூப்பர் பார்மில் உள்ள விராட் கோஹ்லியை விரைவில் வீழ்த்த திட்டங்களை வகுத்துள்ளோம். எங்கள் அணியின் ஒவ்வொரு வீரரும் தங்கள் பாணியில் விளையாட விரும்புகின்றனர்.

களத்தில் எதிரணியினருடன் வாய்த்தகராறில் ஈடுபட அவர்கள் விரும்பினால், அதனால் அணிக்கு சாதகமான சூழல் கிடைக்குமென்றால், அத்தகைய செயலில் ஈடுபடலாம் என்று கூறுவேன். இந்திய அணியின் பந்து வீச்சுக்கு எதிராக எங்களின் தடுப்பாட்டம் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை