‘விலையை அதிகரிக்க முற்பட்டபோது ஊடகங்கள் தடுத்துவிட்டன’

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
‘விலையை அதிகரிக்க முற்பட்டபோது ஊடகங்கள் தடுத்துவிட்டன’

1,000 லீற்றர் குடிநீரை சுத்திகரிப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு 48 ரூபாய் செலவாகிறது. ஆனால், அதை நாங்கள் வெறும் 12 ரூபாய்க்கே மக்களுக்கு வழங்கிவந்தோம். இதனை 18 ரூபாயாக அதிகரிப்பதற்கு நாங்கள் முயன்றபோது, ஊடகங்கள் அதற்கெதிராக பிரசாரங்களை மேற்கொண்டு விலை அதிகரிப்பை இடைநிறுத்தியுள்ளதாக, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிகன்ஹல்மில்லாவ, துருக்கராகம, யக்கல்ல, படிக்கராமடுவ பிரதேசங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை இன்று வழங்கிவைத்த பின்னர், துருக்கராகம ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாங்கள் ஒரு லீற்றர் குடிநீரை 1 சதத்துக்கும் குறைவாகவே வழங்கிவருகின்றோம். ஆனால், மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை 50 தொடக்கம் 60 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். 48 ரூபாய் செலவாகும் 1,000 லீற்றர் குடிநீரை 18 ரூபாய்க்கு வழங்க முற்படும்போது, அதற்கெதிராக ஊடகங்கள் வாயிலாக எதிர்ப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், குடிநீர் விலை அதிகரிப்பை ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

நட்டத்தில் இயங்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையை சமாளிப்பதற்காகவே இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறானதொரு கூற்று. இந்த சிறிய விலை அதிகரிப்பின் மூலம் நீர் வழங்கலை விஸ்தரிப்பதற்கு எதிர்பார்த்திருந்தோம்” என்றார்.

“சுத்தமான குடிநீரின்மையால் வட மத்திய மாகாணங்களிலுள்ள கிராமங்களில் அதிகளவானோர் சிறுநீரக நோய்க்கு ஆளாகியுள்ளனர். கடந்த 15 வருட காலத்துக்குள் வட மத்திய மாகாணத்தில் 15,000 பேர் சிறுநீரக நோயினால் மரணமடைந்துள்ளனர். தற்போது இந்த மாகாணத்திலுள்ள சுமார் 15,000 பேருக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திகொண்டு ஜனாதிபதியின் திட்டத்தின்படி எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் வடமத்திய மாகாணத்திலுள்ள 90 சதவீதமான பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

தொற்றாநோய்களில் மிகவும் அபாயகரமான இந்த சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி 150 பில்லியன் ரூபாய் என்ற பெரியதொரு தொகையை, பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் ஒதுக்கியுள்ளார். இதன் அங்கமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் RO Plant தொகுதிகளை வழங்கி நிறுவி வருகின்றோம். 25 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள RO Plant மூலம் ஒவ்வொரு கிராமங்களிலும் 5,000 குடும்பங்கள் பயனடையவுள்ளன. இவை மக்கள் மயப்படுத்தப்பட்ட உள்ளுர் அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

“தற்போதுள்ள நிலவும் வரட்சியை கருத்திற்கொண்டு மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில்  பயன்படுத்தவேண்டும். குடிநீரை தோட்டங்களுக்கு பாய்ச்சுதல், வாகனங்களைக் கழுவுதல் போன்ற விடயங்களுக்காகப் பயன்படுத்துவதை முடியுமானவரை தவிர்த்துக்கொள்ளுங்கள். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள வரட்சிக்கு ஈடுகொடுப்பதற்காக அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்” எனவும் குறிப்பிட்டார்.

மூலக்கதை