மாணவர்களின் கிரெடிட்டை நீங்கள் வாங்கி கொள்ளாதீர்கள் - சினிமாக்காரர்களுக்கு கமல் அறிவுரை

தினமலர்  தினமலர்
மாணவர்களின் கிரெடிட்டை நீங்கள் வாங்கி கொள்ளாதீர்கள்  சினிமாக்காரர்களுக்கு கமல் அறிவுரை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, எந்தவித கட்சி, அமைப்புகளின் பின்னணி இல்லாமல், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவது பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க முயற்சிக்கின்றனர்.

இயக்குனர்கள் கவுதமன், அமீர், ஜி.வி.பிரகாஷ், லாரன்ஸ், நடிகர்கள் ஆர்யா, மயில்சாமி, ஆரி, ஹிப்ஹாப் தமிழா ஆதி, மன்சூர் அலிகான், ஆர்.ஜே.பாலாஜி, சிவகார்த்திகேயன் நேரில் சென்று இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நடிகர் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல திரையுலகினர் வாய்ஸ் மட்டும் கொடுத்தனர். ‛இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு, இளைஞர்கள் தாங்களாக ஒன்றிணைந்ததும், தேடி வந்து ஆதரவு தெரிவித்து நடிகர்கள் பெயர் வாங்க முயற்சி செய்கிறார்கள் என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதே கருத்தை நடிகர் கமலும் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக கமல் கூறியிருப்பதாவது... ‛‛சினிமா பிரபலங்கள் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து, அவங்க ஒளியை நீங்க வாங்கிக் கொள்ளக்கூடாது. இது அவங்க ஆரம்பிச்சது, அவங்களுக்குத்தான் அந்த கிரெடிட், அது அவர்களின் குரலாக இருக்க வேண்டும். முதல் முறையாக பெருமைப்படும் அளவுக்கு நல்ல முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற ஒட வைத்திருக்கிறார்கள்.

இதில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என நான் நினைக்கிறேன். இது அவர்களுடையப் போராட்டம். நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும். ஆகவே அவர்களை மிரட்டக் கூடாது. அறப்போராட்டத்தில் ஈடுபடும் அவர்களை தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை" என்று கூறியுள்ளார்.

மூலக்கதை