பீட்டாவா.. அப்படின்னா என்னான்னே எனக்குத் தெரியாது!- விஷால்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பீட்டாவா.. அப்படின்னா என்னான்னே எனக்குத் தெரியாது! விஷால்

சென்னை: பீட்டா என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அந்த வார்த்தைக்கான முழு விரிவாக்கம் கூட எனக்குத் தெரியாது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

பீட்டா அமைப்பின் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களின் ஆதரவாளராக சில மாதங்களுக்கு முன்பு குரல் கொடுத்திருந்தார் விஷால். குறிப்பாக கேரளாவில் தெரு நாய்கள் கொல்லப்பட வேண்டும் என்ற மோகன் லாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீட்டா பேனருக்கடியில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்துள்ளார் விஷால்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்ததும், பீட்டாவுடன் தொடர்புடைய அத்தனை பிரபலங்களையும் வெளுக்கத் தொடங்கி விட்டனர் மக்கள்.

குறிப்பாக த்ரிஷா, தனுஷ், விஷால் போன்றவர்களை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பெரும் போரே நடந்தது. இதில் த்ரிஷா, தனுஷ் போன்றவர்கள் நாங்களும் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்கள் என்று கூறிவிட்டனர். ஆனால் பீட்டைவை விட்டு விலகிவிட்டதாகவோ, பீட்டாவை எதிர்ப்பதாகவோ இதுவரை தெரிவிக்கவில்லை.

நடிகர் விஷால் தனக்கும் இந்த பீட்டாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.

அவர் இன்று திடீரென செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், "ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சார, பண்பாட்டு நிகழ்வு. கண்டிப்பாக அந்த நிகழ்ச்சி நடந்தாக வேண்டும். இதுகுறித்துப் பேச நான பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரைச் சந்தித்து தமிழரின் உணர்வு, ஜல்லிக்கட்டின் முக்கியத்துவம் குறித்துப் பேசி, விரைவில் ஜல்லிக்கட்டு நடக்கும்படி செய்வேன்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு நினைத்தால்தான் ஜல்லிக்கட்டு நடக்கும். மாநில அரசு, இப்போது நடக்கும் போராட்டங்கள் போன்றவை அழுத்தம் கொடுக்கத்தான் முடியும். ஆனால் செய்ய வேண்டியது மத்திய அரசு. அதனால்தான் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.

பீட்டாவா... யாரு அது?

சமீப காலமாக பீட்டா ஆதரவாளன் என்ற முத்திரை எனக்கு குத்தப்பட்டுள்ளது. அதில் உண்மையில்லை. நான் பீட்டா ஆதரவாளன் இல்லா. பீட்டா என்பதன் முழு விரிவாக்கம் கூட எனக்குத் தெரியாது. எனவே என்னை பீட்டா ஆதரவாளன் என உண்மை தெரியாமல் குறிப்பிட வேண்டாம்.

இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் பிரமிக்க வைக்கிறது. மிக ஆக்கப்பூர்வமான போராட்டம். முதல் முறையாக இப்போதுதான் இந்த மாதிரி போராட்டங்கள் நடக்கின்றன.

நேற்று கமல் சார் சொன்னதுபோல, இந்த மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டு எங்களை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை!

நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

மூலக்கதை