ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் முர்ரே, பெடரர், கெர்பர் வெற்றி ஹாலெப்...

தினத்தந்தி  தினத்தந்தி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் முர்ரே, பெடரர், கெர்பர் வெற்றி ஹாலெப்...

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழாவில், முதல் சுற்றில் ஆன்டி முர்ரே, பெடரர், கெர்பர் வெற்றி பெற்றனர்.

முர்ரே, பெடரர் வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

கால் முட்டி காயத்தால் 6 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு சவால்மிக்க டென்னிஸ் களத்திற்கு திரும்பியுள்ள முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தகுதி நிலை வீரர் ஜூர்ஜென் மெல்சரை (ஆஸ்திரியா) சந்தித்தார். இதில் 35 வயதான பெடரர் 7–5, 3–6, 6–2, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடங்கள் நடந்தது. பெடரர் அடுத்து தரவரிசையில் 200–வது இடம் வகிக்கும் அமெரிக்க தகுதி நிலை வீரர் நோ ருபினுடன் மோத உள்ளார்.

ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான இங்கிலாந்தின் ஆன்டிமுர்ரே தன்னை எதிர்த்த உக்ரைனின் மார்சென்கோவை 7–5, 7–6 (5), 6–2 என்ற நேர் செட் கணக்கில் விரட்டியடித்தார்.

வாவ்ரிங்காவின் போராட்டம்

முன்னாள் சாம்பியனும், 4–ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவுக்கு முதல் சுற்று எளிதாக அமையவில்லை. அவர் சுலோவக்கியாவின் மார்ட்டின் கிளைஜானுடன் மோதினார். முதல் தடையை கடக்க வாவ்ரிங்கா 3 மணி 24 மணி நேரம் யுத்தம் நடத்த வேண்டி இருந்தது. 5 செட் வரை நீடித்த பரபரப்பான இந்த மோதலில் வாவ்ரிங்கா 4–6, 6–4, 7–5, 4–6, 6–4 என்ற செட் கணக்கில் கிளைஜானை தோற்கடித்தார். 21 ‘ஏஸ்’ சர்வீஸ்கள் வீசியது வாவ்ரிங்காவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. இதே போல் ஜப்பான் முன்னணி வீரர் நிஷிகோரி 5–7, 6–1, 6–4, 6–7 (6–8), 6–2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஆந்த்ரே குஸ்னட்சோவை வென்றார்.

இதே போல் மரின் சிலிச் (குரோஷியா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), பெர்னர்ட் தாமிக் (ஆஸ்திரேலியா), சோங்கா (பிரான்ஸ்) ஆகியோரும் தங்களது முதல் ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

பணத்துக்காக விலகினாரா அல்மாக்ரோ?

பிரான்சின் ஜெரிமி சார்டிக்கு எதிராக களம் இறங்கிய ஸ்பெயின் வீரர் நிகோலஸ் அல்மாக்ரோ முதல் செட்டில் 0–4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தபோது பின்னங்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறி விலகினார். இதையடுத்து 23 நிமிடங்களிலேயே ஜெரிமி சார்டி வெற்றி பெற்றதாக பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முதல் சுற்றில் தோற்றாலும் அதற்குரிய பரிசாக ரூ.25 லட்சம் வழங்கப்படும். அதற்குரிய காசோலையை பெற உடனடியாக அல்மாக்ரோ மைதானத்திற்கு வந்தார். இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்டு சீக்கிரம் தாயகம் திரும்ப வேண்டும் என்பதற்காக அவர் பாதியிலேயே விலகினாரா? என்ற சந்தேகம் கிளம்பியது. ஆனால் அதனை அல்மாக்ரோ மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘விளையாடுவதற்காகத்தான் நான் களத்திற்குள் நுழைந்தேன். தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருந்தவன் நான். 10 மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்துள்ளேன். இந்த சிறிய தொகைக்காக நான் விளையாடுவதில்லை. இது சரியான காரணம் அல்ல’ என்று பதில் அளித்தார்.

கெர்பர்–முகுருஜா

பெண்கள் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6–2, 5–7, 6–2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் லெசியா சுரெங்காவை வீழ்த்தினார். முதல் சுற்றில் கொஞ்சம் தடுமாறிய கெர்பர் அடுத்து 2–வது சுற்றில் சக நாட்டவர் கரினா விட்தோப்ட்டை எதிர்கொள்கிறார்.

பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான கார்பின் முகுருஜா 7–5, 6–4 என்ற நேர் செட்டில் மரினா எராகோவிக்கை (நியூசிலாந்து) வெளியேற்றினார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7–6 (5), 7–5 என்ற நேர் செட்டில் கேதரினா கோஸ்லோவாவை (உக்ரைன்) பதம் பார்த்தார். கனடா ‘புயல்’ பவுச்சார்ட் தனக்கு எதிராக மல்லுகட்டிய சிரிகோவை (அமெரிக்கா) 6–0, 6–4 என்ற நேர் செட்டில் 55 நிமிடங்களில் பந்தாடி அசத்தினார்.

ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா), சுவாரஸ் நவரோ (ஸ்பெயின்), ஸ்விடோலினா (உக்ரைன்), ஜான்கோவிச் (செர்பியா), ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா பிய்க் (பியூர்டோ ரிகோ) உள்ளிட்டோரும் 2–வது சுற்றை எட்டினர்.

ஹாலெப் தோல்வி

தொடக்க நாளில் அதிர்ச்சி தோல்வியாக 4–ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) மண்ணை கவ்வினார். அவரை 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் 52–ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸ் துவம்சம் செய்தார். ஆஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றில் ரோஜர்ஸ் பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.

தோல்விக்கு பிறகு ஹாலெப் கூறுகையில், ‘ரோஜர்ஸ் உயரிய தரத்துடன் விளையாடியதாக நினைக்கிறேன். ஆட்டத்தின் போது எனது கால் முட்டியில் வலி இருந்தது. 2–வது செட்டின் போது அங்கும் இங்குமாக நகர்வதற்கே சிரமப்பட்டேன். ஆனாலும் வெற்றிக்கு ரோஜர்ஸ் தகுதியானவர். அவர் ஆக்ரோ‌ஷத்துடன் பந்தை வலுவாக திருப்பி அடித்தார்’ என்றார்.

இன்றைய 2–வது நாளில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ரபெல் நடால் (ஸ்பெயின்) நோவக் ஜோகோவிச் (செர்பியா), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா(போலந்து) போன்ற முன்னணி நட்சத்திரங்கள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

மூலக்கதை