பிரமாண்டத்தில் குதிக்கிறது மலையாள சினிமா

தினமலர்  தினமலர்
பிரமாண்டத்தில் குதிக்கிறது மலையாள சினிமா

ஒரு காலத்தில் மலையாள சினிமா ஒரு கோடிக்குள் எடுக்கப்படும், அது 3 கோடி வசூலித்தாலே வெற்றி என்பார்கள். ஆனால் இன்றைக்கு மலையாள சினிமாவின் லெவலே வேற. துணிச்சலாக 35 கேடி செலவில் புலிமுருகன் எடுத்தார்கள். 150 வசூலித்து சாதனை படைத்ததோடு மலையாள சினிமாவின் வியாபார தளத்தை விரிவுப்படுத்தியது. அதைத் தொடர்ந்து மலையாள சினிமா தற்போது பிரமாண்ட தளத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.

இதன் அடுத்த பாய்ச்சலாக வரப்போகிறது ரெண்டமூழம், மலையாள திரைக்கதை ஜாம்பவான் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய நாவல் அதே பெயரில் இப்போது படமாகிறது. இது மகாபாரத்தின் ஒரு பகுதியான குருஷேத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. பாகுபலி போன்ற பிரமாண்டத்துடன் 2 பாகங்களாக வெளிவர இருக்கிறது.

வார்னர் பிரதர்ஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்களுடன் மோகன்லால் கைகோர்த்திருக்கிறார். படத்தின் உத்தேச பட்ஜெட் 200 கோடி. மோகன்லாலுடன், மம்முட்டி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம், நாகார்ஜுனா, சிவராஜ்குமார், மஞ்சு வாரியார் நடிக்க இருக்கிறார்கள். இத்தனை மொழி நடிகர்கள் நடிக்க காரணம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். விளம்பர பட இயக்குனரும், மோகன்லாலின் நண்பருமான ஸ்ரீகுமார் இயக்குவார் என்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்க பல நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகத்தை வெளியிட இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறார்கள்.

மூலக்கதை