மெரினாவை நோக்கிச் செல்லும் நடிகர்கள் - கார்த்தி பங்கேற்பு

தினமலர்  தினமலர்
மெரினாவை நோக்கிச் செல்லும் நடிகர்கள்  கார்த்தி பங்கேற்பு

மெரினா கடற்கரை, தமுக்கம் மைதானம், வஉசி மைதானம், அலங்காநல்லூர் என ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைபெறும் இடங்களை நோக்கி நாம் போகாமல் இருந்தால் எப்படி, என தங்கள் மனதில் எந்த குற்ற உணர்வும் வந்துவிடக் கூடாது என மக்கள் அனைவரும் சென்று கொண்டிருக்கிறார்கள். இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல, நம் எதிர்காலத்திற்கான போராட்டம், நம் விவசாயிகளுக்கான போராட்டம், நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான போராட்டம், நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டம் என மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற இந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும், நீர்த்துப் போகச் செய்யவும் சிலர் முயற்சி செய்தார்கள். நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு என ஒரு போராட்டத்தை நடத்தி போராட்டத்திலும் நடிகர்கள் தங்களது நடிப்பை வெளிப்படுத்தினார்கள் என போராட்டக்காரர்கள் தெரிவித்தார்கள். நேற்று அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள் சிலர், அந்தக் குற்ற உணர்வுக்கு தாங்களும் ஆளாகிவிடக் கூடாதென சில நடிகர்கள் மெரீனாவை நோக்கி தற்போது சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று இரவு விஜய் சென்றார், தற்போது நடிகர் கார்த்தி அங்கு மக்களுடன் மக்களாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தங்களது பக்கத்தில் ஒரு நடிகர் இருக்கிறார் என பிரமிக்காமல் அவர்களையும் தங்களது சக போராட்டக்காரர்களில் ஒருவராகவே எதிர்கொள்கிறார்கள் இளைஞர்கள்.

தங்களது கட்-அவுட்டுகளுக்கு பால் ஊற்றுபவர்களாக, சிறப்புக் காட்சிகளுக்கு டிக்கெட் வாங்கி பார்த்தவர்களாக மட்டுமே இளைஞர்களைப் பார்த்த நடிகர்கள், இன்று அந்த இளைஞர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க அங்கு சக மனிதனாகச் செல்லாமல் போனால் அவர்கள் பெரும் தவறு புரிபவர்களாக எதிர்காலத்தில் அந்த இளைஞர்களால் பார்க்கப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி. கூட இருப்பவர்களின் தவறான ஆலோசனைகளைக் கேட்காமல் சுயமாக முடிவு எடுத்து நடிகர்கள் இனியும் அங்கு செல்லவில்லை என்றால் தங்களை தமிழ் நடிகர்கள் என அவர்கள் சொல்லிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

மூலக்கதை