ஜி.எஸ்.பி சலுகைக்கு 27 நிபந்தனைகள் முன்வைப்பு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஜி.எஸ்.பி சலுகைக்கு 27 நிபந்தனைகள் முன்வைப்பு

கவிதா சுப்ரமணியம்

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் ஆனால், அவை அனைத்துக்கும் இலங்கை ஒத்துப்போகவில்லை என்றும், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

“ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதற்காக, 58 நிபந்தனைகளுக்கு இலங்கை உடன்பட்டுள்ளதாக, செய்தி வெளியாகியுள்ளன. இந்தச் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, முன்னைய ஆட்சிக் காலத்தின் போதே 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இருந்த அரசியல் ரீதியான உறுதிப்பாடின்மை காரணத்தினாலேயே, இந்த நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், இலங்கைக்கு ஏற்றவாறான நிபந்தனைகளுக்கு மாத்திரமே நாம் ஒத்துழைப்பு வழங்குவோமே தவிர, அனைத்துக்கும் அல்ல” என்று குறிப்பிட்டார். 

“மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஊடகச் சுதந்திரம், ஊழியர்களுக்கான உரிமை, அடிப்படை உரிமை, சட்டம் மற்றும் ஒழுங்கு, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தல், சுதந்திரமான மற்றும் சாதாரணமான தேர்தலை முன்னெடுத்தல், பாலின சமத்துவம், நாட்டுக்குள் நல்லிணக்கத்தை வகுத்தல், சர்வதேச நல்லிணக்கம், மத நல்லிணக்கம் போன்ற, நாட்டுக்குத் தேவையான நிபந்தனைகளுக்கு மாத்திரமே நாம் முன்னுரிமை வழங்குவோம். எனவே, இந்த மே மாதத்துக்குள், ஜி.எஸ்.பி சலுகை புதுப்பிக்கப்படும் என்று, இலங்கை அரசாங்கம் நம்புகின்றது” என்று அவர் கூறினார்.  

“2017-2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள மனித உரிமை செயற்றிட்டம் பற்றி, அமைச்சரவைக் கூட்டத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது, ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்குரிய நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டள்ளது. இது தொடர்பான அறிக்கைகளை தயாரிப்பதற்கு, அமைச்சரவை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

மூலக்கதை