தாஜுதீன் கொலை வழக்கு: மர்ம வாகனத்தை ஆராய அனுமதி

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
தாஜுதீன் கொலை வழக்கு: மர்ம வாகனத்தை ஆராய அனுமதி

பேரின்பராஜா திபான்

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று, அவரது வாகனத்துக்குப் பின்னால் பயணித்த மற்றுமொரு வாகனம் தொடர்பான சி.சி.டி.வி கமெரா பதிவு அடங்கிய இறுவட்டை, கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி, நேற்று (19) அனுமதியளித்தார்.

  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று, அவரது வாகனத்துக்குப் பின்னால் பயணித்த மற்றுமொரு வாகனம் தொடர்பான சி.சி.டி.வி கமெரா பதிவு அடங்கிய இறுவெட்டை, கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி ஆராய்வதற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க அனுமதி கோரினார். 

அத்துடன், மாலபேயிலுள்ள சைட்டம் (மருத்துவம் மற்றும் தொழில் நுட்பத்துக்கான தெற்காசிய நிறுவகம்) நிறுவகத்திலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட உடற்பாகங்கள் தொடர்பிலான மரபணுப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர், மன்றில் தெரிவித்தார். 

பிரதான சட்ட வைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகர மற்றும் ஏனைய இரு சட்ட வைத்திய அதிகாரிகள், தாஜுதீனின் சடலத்தை முறையாக பிரேத பரிசோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், கொழும்பு மருத்துவ சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.  

சி.சி.டி.வி பதிவை கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப அனுமதித்த நீதவான், வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். 

வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று, நாரஹேன்பிட்டிய சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மூலக்கதை