யுவராஜ், டோனி அதிரடி சதம் போராடி வென்றது இந்தியா

தினகரன்  தினகரன்

கட்டாக்: யுவராஜ்-டோனி அதிரடியாக சதம் அடிக்க இந்தியா 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை போராடி வென்றது. இதன் மூலம் 2-0 முன்னிலையில் தொடரையும் கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. புனேவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 351 ரன் இலக்கை சேஸ் செய்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2வது போட்டி கட்டாக்கில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. கிறிஸ் வோக்ஸ் வேகத்தில் கே.எல்.ராகுல் (5), கேப்டன் கோஹ்லி (8), தவான் (11) அடுத்தடுத்து வெளிறேினர். 5 ஓவரில் 25 ரன்னுக்கு 3 விக்கெட்டை என்ற இக்கட்டான நிலையில் யுவராஜ் - டோனி ஜோடி சேர்ந்தனர். ஒருமுனையில் டோனி பொறுமை காக்க, மறுமுனையில் யுவராஜ் ருத்ரதாண்டவமாடினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது ஸ்டைலான ஷாட்கள் மூலம் இந்திய ரசிகர்களின் கண்களை குளிர்வித்தார். இந்த ஜோடி 256 ரன் சேர்த்த நிலையில் யுவராஜ் முதல் முறையாக 150 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனது 10வது சதத்தை கடந்த டோனி 134 ரன்களுடனும், ஜாதவ் 22 ரன்களுடனும் பிளங்கெட் பந்தில் ஆட்டமிழந்தனர். 50 ஓவரில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன் குவித்தது. ஹர்திக் பாண்டியா 19, ஜடேஜா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 382 ரன் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக ஆடியது. ஆனாலும், அஷ்வின் தனது சுழலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அடக்கினார். அதிரடி வீரர்களான ரூட் (54), பென் ஸ்டோக்ஸ் (1), பட்லர் (10) விக்கெட்டுகளை வீழ்த்தினார். 82 ரன் எடுத்த துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயை ஜடேஜா வெளியேற்றினார். நெருக்கடியான கடைசி கட்டத்தில் கேப்டன் மோர்கன் பிரமாதமாக ஆடி சதம் அடித்தார். இவர், வெற்றியின் விளிம்பு வரை அணியை கொண்டு சென்ற நிலையில், 102 ரன்னில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாக இந்தியா தப்பியது. இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 366 ரன் எடுத்து தோற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 முன்னிலையில் தொடரை கைப்பற்றியது. 3வது மற்றும் கடைசி போட்டி, நாளை மறுதினம் கொல்கத்தாவில் நடக்கிறது.

மூலக்கதை