‘தமிழர்கள் மீது கோர்ட்டுக்கு அக்கறை இல்லை..?’ அசோக்செல்வன் ஆவேசம்

FILMI STREET  FILMI STREET
‘தமிழர்கள் மீது கோர்ட்டுக்கு அக்கறை இல்லை..?’ அசோக்செல்வன் ஆவேசம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

கிட்டதட்ட ரஜினி, விஜய், அஜித் தவிர எல்லாரும் இதற்கான களத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் அசோக்செல்வன் தனது சமூக வலைத்தளத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த கடிதம் பின்வருமாறு:

“வணக்கம், இந்த விஷயத்தை பற்றி என் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்று பல நாட்களாக எண்ணம். அதனால் ஏதேனும் பயன் இருக்குமா, இது தேவையா என்று ஒரு சிந்தனை.

தமிழ் என்ற உணர்வு என் தயக்கத்தை உடைத்ததால் இந்தப் பதிவு.

என் வயது குறைவாக இருக்கலாம். நான் சாதாரண ஆளாக இருக்கலாம். என் கருத்துகள் உண்மையானவை. இன்று சொல்லாவிட்டால் எப்போது சொல்வது?

பரம்பரை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதில் பெருமைப்படுபவன் நான். இளம்பருவத்தில் காலையில் கண்விழித்ததும் பார்ப்பது கம்பீரமான காங்கேயம் காளைகளைத்தான்! நாட்டுப்பசுக்களும் காளைகளும் எருதுகளும் குடும்பத்தில் ஒருவராய் கொண்டாடப்பட்டதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை விதிக்கின்றவே அதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.

நமது பாரம்பரியம், கலாச்சாரம் மேல் நமது அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் அக்கறை இருக்க வேண்டாமா?

மிருகங்களை வதை செய்யும் மிருகக்காட்சி சாலைகளை மூடப்போகிறார்களா? அல்லது மிருகங்களை வதை செய்து பணம் சம்பாதிக்கும் சர்க்கஸை மூடப்போகிறார்களா? மிருகத்தோலை பதனிட்டு ஏற்றுமதி செய்வதை தடை செய்யப் போகிறார்களா? காலணி, பர்ஸ், கைப்பை தடை செய்யப்படுமா?

நேற்று கிரிக்கெட் விளையாட்டில் மாணவர் மரணம். இனி கிரிக்கெட் தடை செய்யப்படுமா? குத்துச் சண்டையில் ஒரு மாணவி மரணம். குத்துச் சண்டை தடை செய்யப்படுமா? தினசரி விபத்துகள் பலர் மரணம். எதை நம்மால் தடுக்க முடியும்? ஜல்லிக்கட்டில் தான் ஆபத்தா? பின் ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்வது ஏன்?

PETAவின் முதலைக்கண்ணீருக்கு மயங்கிவிட்டதா அரசு? அவர்களின் பணவலையில் விலை போய்விட்டார்களா? ஜல்லிக்கட்டுக்குத் தடை என்ற பெயரில் நாட்டுக்காளைகளை ஒழித்துவிட்டால், கோடி கோடியாக பணம் புரளும் இந்திய சதையை கைப்பற்றிவிடலாம் என்று PETAவுக்கு தெரியும். இது ஏன் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் புரியாமல் போனது?

நண்பர்களே! காளைகளை தனது குழந்தைகளைப் போல் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். நாட்டுப்பால் கொடுத்து நமது எதிர்கால சந்ததியினரை ஆரோக்கியமாக வளர்ப்போம்.

பாரம்பரியம் நமது பெருமை!
அதைக் காப்பது நமது கடமை!

ஒன்று சேர்வோம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!”

இவ்வாறு அசோக்செல்வன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Actor Ashok Selvan letter to support Jallikattu

மூலக்கதை