இரண்டரை மாத ஓய்வுக்கு பின் இங்கிலாந்துடனான ஒன் டே தொடரில் களமிறங்கும் டோனி: போதிய பயிற்சி இல்லாததால் சிக்கல்

தினகரன்  தினகரன்
இரண்டரை மாத ஓய்வுக்கு பின் இங்கிலாந்துடனான ஒன் டே தொடரில் களமிறங்கும் டோனி: போதிய பயிற்சி இல்லாததால் சிக்கல்

புதுடெல்லி: இந்திய டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக மகேந்திரசிங் டோனி செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துடன் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட டோனி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.  தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட்கள் முடிந்த நிலையில், 4வது போட்டி மும்பையில் வரும் 8ம் தேதி தொடங்குகிறது. 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னையில் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.  டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் தாயகம் திரும்பும் இங்கிலாந்து அணி, 20 நாட்களுக்கு பின் மீண்டும் இந்தியா வருகிறது. இதன்பின் இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி ஜனவரி 15ம் தேதி புனேவில் நடக்கிறது. சுமார் இரண்டரை மாத இடைவெளிக்கு பிறகு டோனி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடைசியாக அக்டோபர் 29ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டோனி விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு அவர் இரண்டரை மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நீண்ட ஓய்வில் இருந்து வரும் டோனி, தினமும் சில மணி நேரம் உடற்பயிற்சி மட்டும் மேற்கொண்டு வருகிறார்.  கடந்த 2015ம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளுக்காக டோனி, விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்று பயிற்சி பெற்றார். ஜார்கண்ட் அணிக்காக அவர் விளையாடினார். ஆனால் தற்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிவடைந்து, 4 வாரங்களுக்கு பின்பாக, அதாவது பிப்ரவரி 25ம் தேதிதான் இந்த எடிசன் விஜய் ஹசாரே டிராபி தொடங்குகிறது. பிற நாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்கவும், பிசிசிஐ தடை விதித்துள்ளது. இதனால் தற்போது நடந்து வரும் பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் பங்கேற்று பயிற்சி பெறவும் டோனிக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.  இதனிடையே ரஞ்சி டிராபி தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு ஜார்கண்ட் அணி தகுதி பெற்றுள்ளது. ஜார்கண்ட் அணியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட தயாராக உள்ளாரா? என்பதையும் டோனி இன்று வரை தெரிவிக்கவில்லை. ஒரு நாள் போட்டிகளில் ‘ஸ்பெஷலிஸ்ட்டுகளாக’ விளங்கும் சில வீரர்கள், தங்கள் மாநில அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.  இதனால் இரண்டரை மாத ஓய்வுக்கு பின், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போதிய பயிற்சி இல்லாமல்தான் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டோனி களமிறங்குவார் என தெரிகிறது.

மூலக்கதை