ஆசிய கோப்பை மகளிர் டி20: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை மகளிர் டி20: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

பாங்காக்: ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 17 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி சாம்பியன்  பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. பாங்காக்கில் நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில் டாசில் வென்று பேட் செய்த இந்தியா, 20 ஓவரில் 5 விக்கெட்  இழப்புக்கு 121 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மித்தாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 73 ரன் (65 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார்.  ஜுலன் கோஸ்வாமி 17 ரன் எடுத்தார். மந்தனா 6, மேகனா 9, வேதா 2, ஹர்மான்பிரீத் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து 122 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 104 ரன் மட்டுமே எடுத்து 17 ரன்  வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பிஸ்மா மரூப் 25, ஜவேரியா 22, ஆயிஷா 15 ரன் எடுத்தனர். நிதா, சனா தலா 12 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஏக்தா பிஷ்ட் 2, அனுஜா, ஜுலன், ஷிகா, பிரீத்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனை மற்றும் தொடரின் சிறந்த வீராங்கனை விருதுகளை மித்தாலி ராஜ் தட்டிச் சென்றார். இந்திய அணி தொடர்ந்து  2வது முறையாக மகளிர் டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக 2012ல் நடந்த தொடரின் பைனலிலும் பாகிஸ்தானை 19 ரன் வித்தியாசத்தில்  வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2004, 2005-06, 2006-07, 2008ல் ஒருநாள் போட்டித் தொடர்களாக (50 ஓவர்) நடந்த ஆசிய கோப்பை போட்டிகளிலும்  இந்திய மகளிர் அணியே சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை