முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: 164 ரன் விளாசினார் கேப்டன் ஸ்மித்

தினகரன்  தினகரன்
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: 164 ரன் விளாசினார் கேப்டன் ஸ்மித்

சிட்னி: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 68 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சிட்னி கிரிக்கெட்  மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நியூசிலாந்து அணியில் அறிமுக வீரராக பெர்குசன்  இடம் பெற்றார். வார்னர், பிஞ்ச் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஹென்றி வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் பிஞ்ச் டக் அவுட்டானார். அடுத்து வந்த  கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்புடன் விளையாட, வார்னர் 24 ரன், பெய்லி 17, மிட்செல் மார்ஷ் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.ஸ்மித் - ஹெட் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 127 ரன் சேர்த்தது. ஸ்மித் சதம் விளாச, ஹெட் அரை சதம் அடித்தார். ஹெட் 52 ரன் எடுத்து (60 பந்து, 5  பவுண்டரி) போல்ட் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஸ்மித் - மேத்யூ வேட் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்தது.  ஸ்மித் 164 ரன் (157 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), வேட் 38 ரன், ஸ்டார்க் 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்  இழப்புக்கு 324 ரன் குவித்தது. கம்மின்ஸ் (0), ஸம்பா (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் ஹென்றி, போல்ட், நீஷம் தலா 2, பெர்குசன்  1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 325 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.கப்தில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, லதாம் 2, கேப்டன் வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினர். கப்தில் - நீஷம் ஜோடி 3வது  விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. நீஷம் 34 ரன், வாட்லிங் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கோலின் மன்றோ பொறுப்புடன் கம்பெனி  கொடுக்க, அதிரடியாக விளையாடிய கப்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் 114 ரன் விளாசி (102 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) ஸம்பா பந்துவீச்சில் மாற்று  வீரர் மேக்ஸ்வெல் வசம் பிடிபட, ஆஸி. கை ஓங்கியது.சான்ட்னர் 0, கிராண்ட்ஹோம் 6 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். மன்றோ - ஹென்றி ஜோடி 8வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. ஹென்றி 27 ரன்  (15 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), மன்றோ 49 ரன் (59 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து கம்மின்ஸ் வீசிய 44வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசி.  போராட்டம் முடிவுக்கு வந்தது. பெர்குசன் டக் அவுட்டானார். நியூசிலாந்து 44.2 ஓவரிலேயே 256 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. போல்ட் 1 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 3, கம்மின்ஸ், மார்ஷ், ஸம்பா தலா 2, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 68 ரன்  வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. கேப்டன் ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரண்டாவது ஒருநாள் போட்டி கான்பெரா  மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

மூலக்கதை