நிபந்தனைகளுடன் ஐஸ்வர்யா ராய் படத்தை வெளியிடச் சம்மதித்தார் ராஜ் தாக்கரே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிபந்தனைகளுடன் ஐஸ்வர்யா ராய் படத்தை வெளியிடச் சம்மதித்தார் ராஜ் தாக்கரே!

ஐஸ்வர்யா ராய் நடித்த ஏ தில் ஹை முஷ்கில் என்ற இந்திப் படத்தை சுமுகமாக வெளியிட ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி சம்மதம் அளித்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முகேஷ் பட், ஏ தில் ஹை முஷ்கில் பட இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நவிஸை இன்று சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர், சாஜித் நாடியாட்வாலா, விஜய் சிங் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஏ தில் ஹை முஷ்கில் படத்தை வெளியிட ராஜ் தாக்கரே சம்மதம் தெரிவிப்பதாக அறிவித்தார்.

ரண்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரது நடிப்பில் உருவான திரைப்படம் ஏ தில் ஹை முஷ்கில். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர் ஃபவாத் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பாகிஸ்தான் நடிகர் நடித்துள்ள இந்தப் படத்தை வெளியிட ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எதிர்ப்புகளைச் சமாளிக்க படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்களைச் சந்தித்துப் பேசிவந்த நிலையில், ராஜ் தாக்கரே மனதை மாற்றிக் கொண்டு சம்மதம் வழங்கியுள்ளார்.

அதே நேரம் ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளார். "நடிகர்கள், பாடகர்கள் என பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்கள் இனி பாலிவுட்டில் பணியாற்றக்கூடாது. எல்லையில் நமது வீரர்கள் உயிரை இழக்கும்போது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு நாம் ஏன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கவேண்டும்? உரி தாக்குதல் முதல்முறையாக நடந்துள்ளதா?," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜ் தாக்கரேயின் கோரிக்கைப்படி, இந்தப் படத்தின் வசூலில் ரூ 5 கோடியை ராணுவ வீரர் நல நிதிக்கு வழங்கப்படும். மேலும் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வாசகங்களும் டைட்டிலில் இடம் பெறும் என இயக்குநர் கரண் ஜோஹர் உறுதியளித்துள்ளார்.

மூலக்கதை