'தேவி'-யா 'டெவில்'-ஆ...ஒரு பெயர் குழப்பம் ?

தினமலர்  தினமலர்
தேவியா டெவில்ஆ...ஒரு பெயர் குழப்பம் ?

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் 'தேவி'. இந்தப் படத்தை ஆங்கிலத்தில் குறிப்பிடும் போது 'Devi(l)' என்றே குறிப்பிட்டு வந்தார்கள். படத்தின் டிரைலரை வெளியிட்ட போது கூட 'Devi(l) என்றுதான் குறிப்பிட்டார்கள். ஒரு வேளை படத்தை ஹிந்தி, தெலுங்கில் சேர்ந்து எடுப்பதால் அங்கெல்லாம் 'Devi(l)' என்று குறிப்பிட உள்ளார்களோ என்ற ஒரு குழப்பம் இருந்தது. இருந்தாலும் தெலுங்கில் படத்திற்கு 'அபினேத்ரி' என்றும், ஹிந்தியில் 'டுடக் டுடக் டுட்டியா' என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக தங்களது பிரமோஷன்களில் தமிழில் 'தேவி' என்றே குறிப்பிட்டு வருகிறார்கள்.

'டெவில்' என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பிரமோஷன் செய்தால் படத்திற்கு தமிழில் வரி விலக்கு கிடைக்காது. எனவேதான் 'தேவி' என விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆங்கிலத்தில் சில சமயங்களில் பெயர் இருந்தால் அதை 'பெயர்ச் சொல்' ஆக கணக்கிட்டு அந்தப் படத்திற்கு வரி விலக்கு கொடுக்கிறார்கள். அப்படித்தான் 'கபாலி' போன்ற படங்களுக்கும் வரி விலக்கு கிடைத்தது.

'தேவி, டெவில்' என இந்தப் படத்திற்கு ஏற்படுத்திய குழப்பம் போதாது என்று தற்போது படத்தை மூன்று மொழிகளில் 58 நாட்களில் எடுத்ததாகவும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். படத்தை ஹிந்தியில் மட்டுமே முழுமையாக எடுத்திருக்கிறார்கள் என்றும் தமிழிலும், தெலுங்கிலும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களை மட்டும் சேர்த்து அதை மட்டுமே தமிழில் எடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

நேரடித் தமிழ்ப் படங்களை எடுக்கும் சிறு தயாரிப்பாளர்கள் இப்படிப்பட்ட 'பை, டிரை லிங்குவல்' மொழிப் படங்களுக்கு வரி விலக்கு கொடுப்பதை எதிர்க்கிறார்கள். இரு மொழிப் படங்கள் என்று சொல்வதே ஏமாற்று வேலைதான் என்றும் அவர்கள் புலம்புகிறார்கள். பல கோடி ரூபாய் செலவு செய்து 100 சதவீதம் தமிழில் தயாரிக்கப்படாத படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள்.

இதனிடையே 'தேவி' திரைப்படத்தின் வேலைகள் முழுமையாக முடியாததால் படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகாது என்றும் கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது. ஒரு வாரம் கழித்தோ அல்லது இரண்டு வாரங்கள் கழித்தோதான் படம் வெளியாக உள்ளது என்பது இப்போது கிடைத்த தகவல்.

மூலக்கதை