சொந்த மண்ணில் 250வது போட்டி இந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் நாளை துவக்கம் - கொல்கத்தாவில் கொண்டாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சொந்த மண்ணில் 250வது போட்டி இந்தியாநியூசிலாந்து 2வது டெஸ்ட் நாளை துவக்கம்  கொல்கத்தாவில் கொண்டாட்டம்


கொல்கத்தா : இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே 2வது டெஸ்ட் கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டெஸ்ட்  கொண்ட தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 197  ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.



இந்த போட்டி  சொந்த மண்ணில் இந்திய அணி  விளையாடும் 250வது டெஸ்ட்  ஆகும். இதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ளது போல் டெஸ்ட் போட்டியை மணி அடித்து துவங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சண்டிகரில் தயாரித்து கொண்டு வரப்பட்ட சில்வர் மணி  நேற்று மைதானத்தில் நிறுவப்பட்டது.   முதல் நாள் ஆட்டத்தை, இந்தியாவிற்கு  முதலில் உலக கோப்பையை பெற்றுத்தந்த மாஜி கேப்டன் கபில்தேவ்  மணி அடித்து தொடங்கி வைக்கிறார்.

இதேபோல் மற்ற 4 நாள் ஆட்டங்களையும்  மாஜி வீரர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
 
இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. முரளிவிஜய், புஜாரா பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளனர்.

விராட் கோஹ்லி கடைசி 4 இன்னிங்சிலும்  சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருப்பது கவலை அளித்தாலும், அஸ்வின், ஜடேஜா இருவரும் ஆல் ரவுண்டர்களாக வலுசேர்க்கின்றனர். குறிப்பாக அஸ்வின் அசத்தி வருகிறார்.

ராகுல் இல்லாத நிலையில், அணியில் கம்பீர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஆடும் லெவனில் விஜய்யுடன் தவான் களம் இறங்குவார் என தெரிகிறது.

ஆனால் இதனை பயிற்சியாளர் கும்ப்ளே தெளிவுபடுத்த மறுத்து விட்டார். இதேபோல் உமேஷ் யாதவிற்கு பதிலாக புவனேஸ்வர் குமார்  இடம் பிடிக்கலாம்.

மற்றபடி அணியில் எந்த மாற்றமும்  இருக்காது.

மறுபுறம் நியூசிலாந்து அணி கடும் நெருக்கடியில் உள்ளது. குப்தில், ரோஸ் டெய்லர்  பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர்.

லதாம், வில்லியம்சன் , ஆல்ரவுண்டர் சன்ட்னர், வாட்லிங் , ரோஞ்ச் என சிறந்த பேட்ஸ்மேன்கள்  உள்ள போதிலும் இந்திய சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். கொல்கத்தா மைதானமும் கடைசி 3 நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால்  அந்த அணிக்கு பாதகமாக இருக்கும்.

முதல் டெஸ்ட்டில் 3 சுழலுடன் களம் இறங்கியும் நியூசிலாந்து அணியால் சாதிக்கமுடியவில்லை. இதனால் அந்த அணி பெரிய அளவில் மாற்றங்களுடன் களம் இறங்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.



.

மூலக்கதை