யேமன் ராணுவ ஆள்சேர்ப்பு மையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 60 பேர் பலி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

தினமணி  தினமணி
யேமன் ராணுவ ஆள்சேர்ப்பு மையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 60 பேர் பலி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

யேமனில் அரசுப் படையினருக்கான ஆள் சேர்ப்பு மையத்தில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர்.

யேமனின் இரண்டாவது பெரிய நகரான ஏடனில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஏடன் நகரின் வடக்குப் பகுதியில், ராணுவத்துக்கு ஆள் சேர்த்து, அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் மையம் அமைந்துள்ளது.

அந்த மையத்துக்கு வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை ஓட்டி வந்த ஒரு பயங்கரவாதி, அங்கே குழுமியிருந்த பயிற்சி ராணுவத்தினரிடையே அதனை வெடிக்கச் செய்தார்.

பயிற்சி ராணுவத்தினர் உள்ளே இருப்பதால் அந்த மையத்தின் வாயில் கதவு பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருந்த நிலையிலும், மற்றொரு சரக்கு வாகனத்துக்காக கதவைத் திறந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த பயங்கரவாதி மையத்துக்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நிகழ்த்தினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலில் மையக் கட்டடம் இடிந்து விழுந்ததாகவும், இதில் ஏராளமான பயிற்சி ராணுவத்தினர் புதையுண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்த அனைவரும் பயிற்சி ராணுவத்தினரா என்பது குறித்து உடனடித் தகவல் இல்லை.

ஏடன் நகரில் கடந்த சில வாரங்களாகவே பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்வதேச ஆதரவு பெற்ற அதிபர் அல்-அபாதி ஆதரவுப் படையினர் மற்றும் அதிகாரிகளைக் குறிவைத்து அல்-காய்தா அல்லது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல்கள் நிகழ்த்தி வருகின்றன.

இந்தச் சூழலில் ராணுவ ஆள் சேர்ப்பு மையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

யேமனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் இதுவரை 6,600 பேர் உயிரிழந்தனர்.

மேலும் நாட்டின் 80 சதவீதத்துக்கும் மேலானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அத்தியாவசியப் பொருள்கள் இன்றித் தவித்து வருகின்றனர்.

 

மூலக்கதை