விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி

NEWSONEWS  NEWSONEWS
விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி

ஜேர்மனியை சேர்ந்த Allianz என்ற மிகப்பெரிய காப்பீடு நிறுவனம் தான் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் BonusDrive என்ற அப்பை(App) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அப் வாகனத்தில் பொருத்தப்பட்டவுடன் காரின் ஒட்டுமொத்த அசைவுகளையும் பதிவு செய்ய தொடங்கி விடும்.

அதாவது, கார் புறப்பட்ட பிறகு ஓட்டுனர் எவ்வளவு வேகத்தில் ஓட்டுகிறார்? எப்படி பிரேக் போடுகிறார்? சாலையில் உள்ள வளைவுகளில் எப்படி பாதுகாப்பாக திரும்புகிறார்? உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்யும்.

உதாரணத்திற்கு, ஒரு நபர் 100 கிலோ மீற்றர் பயணம் செய்கிறார் என்றால், அந்த 100 கி.மீ தூரத்தை எவ்வளவு பாதுகாப்பாக ஓட்டியிருக்கிறார் என்பதை கணக்கிட்டு ‘தங்கம், வெள்ளி, வெண்கலம்’ உள்ளிட்ட மதிப்பீட்டை(Rating) அளிக்கும்.

இவ்வாறு ஒரு வருடம் முழுவதும் கணக்கிட்டு வருடத்தின் இறுதியில் ஒட்டுமொத்த பயணத்திற்கும் ஒரே மதிப்பீடு அளிக்கும்.

இந்த மதிப்பீடு தங்கமாக இருந்தால், ஓட்டுனர் செலுத்தும் காப்பீட்டு பணத்தில் 30 சதவிகிதம் ஓட்டுனருக்கே திரும்ப அளிக்கப்படும்.

மதிப்பீடு வெள்ளியாக இருந்தால் 20 சதவிகிதமும், வெண்கலமாக இருந்தால் 10 சதவிகிதமும் காப்பீட்டு பணத்தை திரும்ப ஓட்டுனருக்கே அளிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து காப்பீட்டு நிறுவன நிர்வாகியான Frank Sommerfeld என்பவர் பேசுகையில், ‘இந்த வசதி 28 வயது வரை உள்ள இளம் ஓட்டுனர்களை குறிவைத்து அறிமுகப்படுத்தவுள்ளது. ஏனெனில், இந்த வயது உடையவர்கள் தான் அதிகளவில் காப்பீட்டு தொகை செலுத்த வேண்டியுள்ளதாக’ அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை