தண்டனை காலம் 2020 ஆகஸ்ட்டோடு முடிவதால் கோஹ்லி டீமில் விளையாட விருப்பம்: சூதாட்ட புகாரில் சிக்கிய சாந்த் நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தண்டனை காலம் 2020 ஆகஸ்ட்டோடு முடிவதால் கோஹ்லி டீமில் விளையாட விருப்பம்: சூதாட்ட புகாரில் சிக்கிய சாந்த் நம்பிக்கை

புதுடெல்லி: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை, உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி நீக்கியது. அத்துடன் ஸ்ரீசாந்திற்கு எவ்வளவு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பிசிசிஐ விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி டி. கே. ஜெயின், மூன்று மாதத்திற்குள் முடிவு செய்வார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, ‘ஸ்ரீசாந்திற்கான தண்டனை 7 ஆண்டுகள்’ என நீதிபதி டி. கே. ஜெயின் நேற்று தெரிவித்தார். அத்துடன், ‘அடுத்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி முதல் அவர் மீதான தடை முடிவுக்கு வரும்’ என்று அவர் கூறினார்.

இதுகுறித்து, சாந்த் கூறியதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே தன்னுடைய வாழ்நாள் லட்சியம்.

என்மீதான தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.

அவர்களது பிரார்த்தனை இன்று பலித்துள்ளது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 87 விக்கெட் எடுத்துள்ளேன்.

100 டெஸ்ட் விக்கெட் எடுப்பதே எனது லட்சியம். அடுத்தாண்டு (2020) ஆகஸ்ட் மாதத்தோடு தண்டனை காலம் முடிவதால், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்புவேன் என்று, எனக்கு நம்பிக்கை உள்ளது.

விராட் கோஹ்லி தலைமையில் விளையாட எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை