இலவச ஏ.டி.எம்., பரிவர்த்தனை ஆர்.பி.ஐ., கண்டிப்பு

தினமலர்  தினமலர்
இலவச ஏ.டி.எம்., பரிவர்த்தனை ஆர்.பி.ஐ., கண்டிப்பு

‘வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை; தொழில்நுட்ப கோளாறுகளால் பணம் வரவில்லை எனில், அது போன்ற பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர்களின் இலவச, ஏ.டி.எம்., பரிவர்த்தனை கணக்கில் சேராது’ என, இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.


இது குறித்து, ஆர்.பி.ஐ., எனும் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:தொழில்நுட்ப கோளாறு, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை உட்பட, பல்வேறு காரணங்களால், பணம் எடுக்காத பரிவர்த்தனைகளும், இலவச, ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளுக்குள் உள்ளடக்கப்படுவதாக, தெரிய வந்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு, தொடர்பு பிழைகள், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை, வங்கி மற்றும் சேவை வழங்குவோரால் ஏற்படும் தவறுகள், தவறான ரகசிய குறியீட்டு எண் உட்பட, பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் பரிவர்த்தனைகளை, வாடிக்கையாளர்களின் இலவச, பரிவர்த்தனை கணக்கில் சேர்க்க கூடாது.


இதற்கான சேவைக் கட்டணமும் வசூலிக்க கூடாது.மேலும், வங்கி கணக்கில் இருப்பு தொகையை விசாரித்தல், காசோலை புத்தகம் கோரல், வரி செலுத்துதல், பண பரிமாற்றம் செய்தல் போன்ற, பணம் அல்லாத பரிவர்த்தனைகளும், இலவச பரிவர்த்தனை கணக்கில் சேராது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை